கே.எம்.சி.ஹெச் மருத்துவப் பயணத்தில் மற்றுமொரு புதிய பாதை!

கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனை தொடக்கம்

கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் தனது மருத்துவ சேவை பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பொது மருத்துவமனையை அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது.

தென்னிந்தியாவின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான கே.எம்.சி. ஹெச் மருத்துவமனை 2019ஆம் ஆண்டு தரமான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியது. இந்தக் கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 750 படுக்கை வசதியுடன் கூடிய புதிய பொது மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல. ஜி. பழனிசாமி இந்த பொது மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நல்ல. ஜி. பழனிசாமி கூறியதாவது: கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாக செயல்படும் இந்த மருத்துவமனை மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும், மக்களுக்கு பயன்படும் வகையிலும், குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் எனத் தெரிவித்தார்.

31 ஆண்டு கால மருத்துவ சேவை பயணத்தில் இது மற்றுமொரு சாதனை எனவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க கே.எம்.சி. ஹெச் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது எனவும் கூறினார்.

750 படுக்கை வசதி கொண்ட இப்புதிய பொது மருத்துவமனையில் 50 படுக்கைகள் பல்வேறு தீவிர சிகிச்சை பிரிவிலும், 30 படுக்கைகள் அவசரகால விபத்து சிகிச்சைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 11 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன.

இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, அல்ட்ரா சவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற நவீன வசதிகளும், மேலும் ஆபரேஷன் தியேட்டரில் அதி நவீன மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனை பொதுமக்கள் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும். அவினாசி சாலையில் இருந்து தனிவழி அமைக்கப்பட்டுள்ளது. கே.எம்.சி.ஹெச் பிரதான மருத்துவமனையில் இருந்து தனித்து செயல்படும்.

பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ சேவைகளைப் பெற்று பயன்படுமாறு தெரிவித்தார்.