செந்தில் பாலாஜியின் வருகை: திருப்பம் தருமா கோவை திமுகவுக்கு?

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் திமுக அணி வெற்றி பெற்றிருந்தாலும் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கொங்கு மண்டலத்தின் தலைநகரமாக கருதப்படும் கோவை மாவட்டத்தில் பத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதற்கு பல தரப்பட்ட காரணங்கள் கூறப்பட்டன.

சமூக ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான சமூகத்தினர் ஒன்று திரண்டதாலும், அதே போன்று மத ரீதியாக பாஜக, அதிமுக அணிக்கு அதிகப்படியான இந்துக்களின் வாக்குகள் கிடைத்ததாலும் இந்தப் பகுதியில் திமுக தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதை சரி செய்வதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பெரும் முயற்சி எடுத்து வருகிறார். கடந்த காலத்தில் திமுக நடந்து கொண்டது போல் இல்லாமல் இந்தமுறை திமுக தனது சொந்த பலத்திலேயே இந்த மாவட்டத்தில் வெற்றி பெறவேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கணக்கு போடுகிறார். அதற்காக கரூர் மாவட்டத்தில் நான்கில் மூன்று தொகுதியில் வெற்றி பெற்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கரை தோற்கடித்து, கரூர் மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்க்கான பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளார். இதன் மூலம் கரூரை எப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவின் கோட்டையாக இரண்டு ஆண்டுகளில் மாற்றினாரோ அதே போன்று கோவை மாவட்டத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்றுவார் என்ற நம்பிக்கை முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரை கரூரில் எம்.ஆர். விஜய பாஸ்கர் கடுமையான போட்டியைக் கொடுத்த பிறகும் அந்த தொகுதியில் வெற்றி பெற்று திமுகவின் பலத்தை நிலை நாட்டினார். கோவை மாவட்ட அரசியலைப் பொறுத்தவரை இந்துத்துவா உணர்வு சற்றே அதிகமுள்ள மாவட்டம் என்பது உண்மை.

காரணம் 1998 கோவை குண்டு வெடிப்பிற்குப் பிறகு அந்தப் பகுதியில் இந்துத்துவா சற்று வேரூன்றி இருக்கிறது.

இதை உடைப்பதற்கு திராவிட கருத்துக்களை முன்னெடுக்காமல் அதிமுகவில் பெருமளவில் இருக்கும் வெள்ளாள சமூகத்திற்கு மாற்றாக சிறிய எண்ணிக்கை சமுதாயங்களை கையில் எடுத்து அரசியல் செய்வது திமுகவிற்கு சிறந்ததாக இருக்கும். அதற்கு ஒரு நல்ல அரசியல் வியூக வித்தகர் வேண்டும் என்பதற்காகவே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளார் ஸ்டாலின்.

செந்தில் பாலாஜி எதிர் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சிக்கு எவ்வாறான உத்திகளைக் கையாண்டு வெற்றி பெற செய்யப் போகிறார் என்பதே அவர் முன்னிருக்கும் முதல் சவால். அதைப் பொறுத்தே திமுக கோவை மாவட்டத்தில் எவ்வாறு வளரப் போகிறது என்பது தெரியும்.

ரிஷி, அரசியல் விமர்சகர்