கோவையில் இலவச விவசாய மின் இணைப்புகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி  வைத்தார்

கோவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை ஏற்றபின் செந்தில் பாலாஜி முதல் முறையாக கோவை வந்தார். பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கோவை மாவட்டத்தில் ஒரு இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி  வைத்தார்.

மின்துறையில் பணியின் போது மறைந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஒன்பது நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில்:

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 8905 மின்மாற்றிகள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.  ரூ. 203 கோடி வரையில் மின்வாரியம் சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றது.   மின்வாரியத்தில் புதிய நடைமுறைகள் இல்லை. ஏற்கனவே இருக்கும் நடைமுறைகள் பின்பற்றபடுகின்றது.

10 ஆண்டுகளில் சொந்த நிறுவுதிறன் 53 மெகாவாட் மட்டும் அதிகபடுத்தப்பட்டு இருக்கின்றது. ஆய்வு பணிகள் தொடர்ந்து வருகின்றது. உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி 2500 மெகாவாட்டாக இருக்கின்றது. இடைவெளியை குறைக்க சூரிய மின்சக்தி, கேஸ் மின் உற்பத்தி ஆகியவற்றை அதிகப்படுத்தவும், ஏற்கனவே திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தாமல் வைத்திருக்கும் திட்டங்கள் செயல் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மின்வாரியத்திற்கு இருக்கும் கடனிற்கு 13 சதவீதம் வரை வட்டி கட்டி வருகின்றோம். செலவீனங்களை குறைக்கவும் வெளிப்படைத் தன்மையுடன் இந்த அரசு  செயலபட்டு வருகின்றது. புதிய பணிநியமனங்கள் வரும் போது இந்தப் பிரச்சினைகள் முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.

கோவையில் சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு கூட்டத்திற்கு பின்பு இந்த நிலையினை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனது கூறியுள்ளார்.