தொழில் வரியில் இருந்து விலக்கு கேட்கும் குறுந்தொழில் முனைவோர்

கோவை: மாநகராட்சி விதிக்கும் தொழில்வரி மற்றும் தொழிலாளர் வரியிலிருந்து ஐந்து பேருக்கு உட்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று காட்மா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளாது.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவகுமார் கூறியதாவது: ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, கொரோனா அச்சுறுத்தலால் பணி குறைவு உள்ளிட்ட நெருக்கடிகளால் குறுந்தொழில் முனைவோர்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் எங்களிடம் தொழில் வரி மற்றும் தொழிலாளர் வரி செலுத்த கூறுகின்றனர்.

குறிப்பாக, ஒரு நிறுவனம் ஆரம்பித்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றதோ அத்தனை ஆண்டுகளுக்கும் மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ இந்த வரிகளை செலுத்த நிர்பந்திக்கின்றனர். இதனால் குறுந்தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே 1 முதல் 5 தொழிலாளர்கள் பணிபுரியும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இந்த இரண்டு வரிகளில் இருந்தும் முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதோடு, ஒரு சில குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் குறு நிறுவனங்கள் குறித்து அவ்வப்போது புகார் எழுகிறது. இந்தப் புகார் கிடைக்கப்பெற்ற உடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக புகார் கிடைத்தால் அதிகாரிகள் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து அங்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.