கோவையில் 6வது மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

கோவையில் 6வது மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 6ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கோவையைப் பொறுத்தவரை மாவட்டத்தின்‌ மக்கள்‌ தொகையான 38,67,926 நபர்களில்‌, 18வயது பூர்த்தியடைந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ளவர்கள்‌ என 27,90,400 பேர்‌ கண்டறியப்பட்டுள்ளனர்‌.

இதில்‌ 93 சதவீதத்தினர் முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதேபோல்‌ 37 சதவீதம் பேருக்கு இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த மெகா தடுப்பூசி முகாம்களின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்‌, இன்று 6வது மெகா தடுப்பூசி வழங்கும்‌ முகாம்‌ நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம்‌ 1370 முகாம்கள்‌ நடைபெறுகிறது.

இம்முகாமில்‌ சுமார்‌ 2 லட்சம்‌ நபர்களுக்கு தடுப்பூசிகள்‌ வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள்‌, இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு காத்திருப்போர்‌ என அனைவரும்‌ இம்முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி பெற்று பயனடைய வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.