கோவையில் ஸ்கில் ஃபாவ்ஸ் திறன் மேம்பாடு மையம்

கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறனை அதிகரிக்கும் விதமான ஸ்கில் ஃபாவ்ஸ் (Skill Favs) எனும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் அமைப்பு வழிகாட்டல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மாறி வரும் நவீன உலகில் கல்வி கற்றலில் புதிய கல்வி திட்டங்கள் மற்றும் முறைகள் அறிமுகமாகி வருகின்றன. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென நாட்டிலேயே முதன் முறையாக தொழில் மற்றும் பன்முக திறமைகளை வளர்ப்பதற்கான ஸ்கில் ஃபாவ்ஸ் எனும் திறன் வழிகாட்டல் பயிற்சி மைய தொடக்க விழா கோவையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதற்கான தொடக்க விழாவில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இணையதளம் வழியாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கேரள மாநிலம் கோழிக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் ராகவன் கலந்து கொண்டார்.

இதில் ஸ்கில் ஃபாவ்ஸ் மையத்தின் இயக்குனர்கள் டாக்டர் சேது மாதவன், ஆனந்தநாராயணன், சி.இ.ஓ. ஃப்ரெட்ரிக் ஜான், வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திறன் மேம்பாட்டு மையம் குறித்து அதன் இயக்குனர் சேது மாதவன் கூறுகையில்: அனைத்து துறை சார்ந்த அறிவு மேம்பாட்டு தகவல்கள் குறித்த புரிதல்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது கல்வி பயிலும் காலங்களிலே அவர்களது திறனை வளர்க்கும் விதமாக இந்த மையம் செயல்பட உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதயாக கோவை மாவட்டம் இருப்பதால் இந்த மையத்தை இங்கு தொடங்கியதாகவும் வரும் காலங்களில் பெங்களூர், கொச்சின், புதுச்சேரி போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் கூடுதல் மையங்களை தொடக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.