பூச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ.5 கோடி செலவில் பூச்சியியல் துறையில் பூச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா இன்று (26.03.18) நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அவர் பேசுகையில், பூச்சிகளின் வகைகள் மற்றும் அவற்றின் நன்மை தீமைகள் குறித்து இங்கு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. சுமார் 75,000 பூச்சி வகையினங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எந்த பூச்சி கடித்தால் எவ்விதமான நோய்கள் வரும் என்பதும் இங்கே தெளிவாக கூறியுள்ளனர். இது போன்ற கண்காட்சி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதே சமயம் மாணவர்களும் இதனை பயன்டுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும், விவசாயிகள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள பூச்சியினங்களை பார்க்கும் பொழுது, தங்களது விவசாயத்திற்கு ஏற்ற பூச்சியினங்கள் மற்றும் விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பூச்சியினங்களை கண்டுகொள்ள முடியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் உற்பத்தி ஆணையாளர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சுகன்தீப் சிங் பேடி வரவேற்புரையாற்றினார். வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணைவேந்தர் ரா.துரைக்கண்ணு தலைமையுரையாற்றினார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த அருங்காட்சியகத்தின் வரவேற்பு அறையில் “பூச்சிகளே புவியின் அரசர்கள்” என குறிக்கும் வகையில் பெரிய விளக்கப்பட வரைவு அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வகை பூச்சிகளின் மாதிரிகள் ஒரே மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. பூச்சி வேறுபாடு, பூச்சி உயிரியல், நன்மை பயக்கும் பூச்சிகள், பூச்சிகளும் தாவரங்களும் மற்றும் கலாச்சார பூச்சியியல் ஆகியவை ஐந்து கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், ஒரு மரச் செதுக்கல் “பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்களே” எனக் கூறும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. நிறைவில், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி நன்றியுரை வழங்கினார்.