5 மரங்களை வெட்டிய ஊராட்சி: நூறு மரங்களை நட வேண்டும்! – தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவு

தேனி மாவட்டம், ஸ்ரீரெங்கபுரம் என்ற ஊராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு மைதானம் அருகில் இருந்த இரண்டு வாகை மரங்கள், ஒரு நாவல் மரம், ஒரு அரச மரம், ஒரு வேப்ப மரம் ஆகிய 5 மரங்கள் அனுமதி இல்லாமலும் தகுந்த காரணமில்லாமலும் வெட்டப்பட்டதாகவும், தனி மனித சுய லாபங்களுக்காக இயற்கை வளங்களை அழிக்கும் செயலை தடுக்க ஊராட்சி மற்றும் வருவாய்த்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீரெங்கபுரம், பள்ளித்தெருவில் குடியிருக்கும் சதீஷ்குமார் என்ற இளைஞர் தேனி மாவட்டத்தில் செயல்படும் பொது பயன்பாட்டு சேவைக்கான நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஜூலை மாதம் 15-ஆம் தேதி புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிரந்தர மக்கள் நீதி மன்றத்தின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான அ.முகமது ஜியாவுதீன் கண்டமனூர் மின்சார வாரியம் பொறியாளர், ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சித் தலைவர், ஊராட்சி அலுவலர், தப்புக்குண்டு மற்றும் தாடிச்சேரி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்.

மின்சார வாரியத்தின் சார்பில் ஆஜரான தேனி உதவி மின் பொறியாளர், விளயாட்டு மைதானம் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி மேற்கொண்டபோது மின் கம்பிகள் அமைக்கும் இடத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மரக்கிளைகளை வெட்டுவதற்கு உத்தரவிட்டதாகவும் தவறுதலாக மரங்கள் வெட்டப் பட்டதாகவும், கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வெட்டப்பட்ட மரங்கள் கைப்பற்றி ஊராட்சி அலுவலகத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பகார்தாரர் மற்றும் அரசு அதிகாரிகள் தரப்பில் விசாரிக்கப்பட்ட பின்னர் அவசியம் இல்லாமல் மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஶ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் வெட்டப்பட்ட ஐந்து மரங்களுக்கு ஈடாக நூறு மரங்களை ஒரு மாதத்திற்குள் நட வேண்டும் என்றும், மரம் நடப்படும் நிகழ்வை தாடிச்சேரி கிராம நிர்வாக அலுவலர் உறுதிப்படுத்தி தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி முகமது ஜியாவுதீன் உத்தரவிட்டார். விசாரணையின் போது நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் பிரதாப்சிங், குமரேசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.