குறையும் பருவமழை: நீர் சிக்கனம் அவசியம்

கோவையில் இந்த ஆண்டு சராசரியை விட குறைந்த அளவே மழை பதிவாகியுள்ளது, சமவெளி பகுதிகளுக்கு வடகிழக்கு பருவமழை காலங்களில் தான் அதிக மழை கிடைக்கிறது. மேலும், வடகிழக்கு பருவமழை பற்றி தற்போதே கணிப்பது கடினம் என்று வானிலை ஆர்வலர் மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை காலநிலை மாற்றங்கள் மாநகரை சுற்றி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளினால் வடிவமைக்கப்பட்டவை, உதாரணமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் பருவமழை தீவிரமாக இருக்கும் சமயங்களில் பாலக்காடு கணவாய் பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கும். அதே போல் பருவமழை பலவீனமான காலங்களில் வடகோவை பகு‌திக‌ளி‌ல் வெப்பச்சலன மழை இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ளது போல மாவட்டத்தில் பதிவாகும் மழை அளவீடும் மாறுகின்றன.

அதாவது தமிழ்நாட்டில் ஆண்டிற்கு அதிக மழை பதிவாகும் பகுதியும் (சின்னக்கல்லார் சராசரியாக 4660mm), குறைந்த மழை பதிவாகும் பகுதியும் (கிருஷ்ணராயபுரம் சராசரியாக 430mm) கோவையில் தான் உள்ளது. இந்த வேறுபாடுகளால் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழை ஒரு பகுதியில் குறைந்து இருந்தாலும், மலை பகுதியில் பதிவாகும் அதிக மழையினால் அதிகமாகவே தெரிகிறது. இதை மலை பகுதி மற்றும் சமவெளி பகுதி என பிரித்தால் ஆண்டிற்கு 1195mm மற்றும் 696mm (சமவெளி ) என மழை பதிவாகிறது.

இ‌தி‌ல் பெரும் பங்கு தென்மேற்கு பருவமழை மற்றும் வட கிழக்கு காலங்களில் இருந்து கிடைக்கிறது. அதாவது 618mm தென்மேற்கு பருவமழை காலங்களிலும், 365mm வடகிழக்கு பருவமழை காலங்களில் மலை பகுதியில் பதிவாகிறது. சமவெளி பகுதிக்கு என்று பார்த்தால் 193mm, 327mm இரு பருவ காலங்களிலும் பதிவாகிறது. மலையில் பதிவாகும் மழை நீர் அணைகளை நிரப்புவதால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன் பட்டாலும் மாவட்டத்தில் 60% பகுதி நிலத்தடி நீர் மற்றும் பருவ காலங்களில் பதிவாகும் மழையை நம்பியே உள்ளன.

கட‌ந்த மூன்று ஆண்டுகள் மாவட்டத்தின் மழை சராசரி அளவில் இருந்ததால் விவசாய நீர் தேவை திருப்தியாக இருந்தது. ஆனால் இம்முறை இதுவரை சராசரியை விட குறைந்த அளவே மழை பதிவாகியுள்ளது. மேலும் சமவெளி பகுதிகளுக்கு வடகிழக்கு பருவமழை காலங்களில் தான் அதிக மழை கிடைக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் மட்டுமே சராசரி மழை பதிவாகியுள்ளது. மற்ற ஆண்டுகளில் மழை பற்றாக்குறை அல்லது பருவம் தப்பிய மழையே பதிவாகியுள்ளது. மேலும் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை ஆராய்ந்தால் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாத மத்தியில் சற்று தீவிரமடைய வாய்புள்ளது. எனினும் செப்டம்பர் மாத சராசரி மிகவும் குறைவு. எனவே தற்போது உள்ள மழை பற்றாக்குறை சற்றே குறைய மட்டுமே வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகம் இருந்தால் மட்டுமே நீர் பற்றாக்குறை தீரும். ஆனால் வடகிழக்கு பருவமழை பற்றி தற்போதே கணிப்பது கடினம். எ‌ன்றாலு‌ம் வரும் முன் காக்கும் விதமாக மாவட்டத்தின் முக்கிய பணியாக நிலத்தடி நீர் சேமிப்பு முயற்சிகளை மேற்கொள்ளுதல் பயனை தரும்.