24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி

கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி மையத்தை மாவட்ட கலெக்டர் சமீரன் திங்கட்கிழமை (23.08.2021) துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிற மாநிலங்கள், நாடுகளுக்கு செல்லவும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் தேவைப்படுகிறது.

ஆனால் தடுப்பூசி உரிய நேரத்தில் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை  மாவட்ட கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார்.

இதுகுறித்து கலெக்டா் சமீரன் கூறும்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள், அவர்களுடன் இருக்கும் உறவினர்கள், மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நபர்களுக்கு 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் தடுப்பூசி முகாம் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும்.

மேலும் இஎஸ்ஐ மருத்துவமனை, பிற அரசு மருத்துவமனையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.