வளரி கலையை தேசிய விளையாட்டு துறையில் இணைக்க கோரிக்கை

தமிழர்களின் பாரம்பரிய வளரி கலையை தேசிய விளையாட்டு துறையில் இணைப்பது குறித்து, மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனை சந்தித்து சர்வதேச வளரி பெடரேஷன் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது

தமிழக பாரம்பரியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட கலையாக வளரி பார்க்கப்படுகிறது. தமிழர்களின் கலாச்சார பாரம்பரிய கலை ஆகவும் ஆங்கிலேயர்கள் வியந்த கலையாகவும் இருந்த வளரி கலை தற்போது அழியும் விளிம்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச வளரி பெடரேஷன் தலைவர் தியாகு நாகராஜ், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனை சந்தித்து வளரி கலை குறித்து பேசினார்.

அப்போது அவர், தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் உள்ள வளரி கலையை தேசிய விளையாட்டு துறையில் இணைப்பது குறித்து, மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டு கொண்டார். தொடர்ந்து அவர், அதற்கான கோரிக்கை மனுவையும் அவரிடம் வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது அழிந்து வரும் வளரி கலையை, சிலம்பம் கலையை போன்று மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பயிற்றுவித்தால் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வளரி கலையை அழியாமல் பாதுகாக்க முடியும் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கவுண்டம்பாளையம் பாஜக ஊடக தலைவர் ராமநாதன், சர்வதேச வளரி பெடரேஷன் செயற்குழு உறுப்பினர்கள் சிவமுருகன் அரவிந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.