நான்காம் வகுப்பு பயிலும் மாணவி 9 புத்தகங்கள் எழுதி சாதனை!

கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் மாணவி 9 புத்தகங்களை தானே எழுதி 9 மணி நேரத்தில் 9 இடங்களில் புத்தகங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் புளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் ராஜலட்சுமி தம்பதியர் இவரது மகள்கள் ஹர்ஷவர்தினி, இளையமகள் ஹரிவர்ஷினி. இதில் ஹரிவர்ஷினி நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயதில் இருந்தே கதைகள் கேட்பதில் ஆர்வமுடைய ஹரிவர்ஷினி, தனது தாயாரின் உதவியுடன் ஒன்பது சிறுவர்களுக்கான கதைகளை எழுதியுள்ளார்.

மூணு கண்ண வந்துட்டான், குக்கூ குக்கூ தவளை, குகைக்குள் பூதம், காட்டுக்குள் திருவிழா, அரை பல காணம், ஐந்து பூதங்கள், மேக்கப் போட்ட விலங்குகள், காண்டாமிருகம் எதுக்கு ஓடுது, நிசாசினியின் மீன் பொம்மைகள் என ஒன்பது கதைகளை எழுதியுள்ளார். இவரின் கதைகளுக்கு இவரது சகோதரி ஹர்ஷவர்தினி ஓவியம் தீட்டியுள்ளார். ஹரிவர்ஷினி, தான் எழுதிய ஒன்பது புத்தகங்களை ஒன்பது மணி நேரத்தில், ஒன்பது இடங்களில் வெளியிட்டு ‘இந்தியன் புக் ஆப் சாதனை’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை இரயில் நிலையத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ்துறை உதவி பேராசிரியர் மணிகண்டன் வெளியிட ஸ்ரீஅன்னபூர்ணி எலக்ட்ரிக்கல் கோவை கார்த்தி புத்தகத்தை பெற்று கொண்டார். ஒன்பது வயதில், ஒன்பது வெவ்வேறு கதை புத்தகங்களை எழுதிய சிறுமி ஹரிவர்ஷினிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.