3 நிமிடத்தில் 50 திருக்குறள்: கோவை மாணவி சாதனை!

கோவையை சேர்ந்த சிவதர்ஷிணி என்ற பள்ளி மாணவி 190 விநாடிகளில் 50 திருக்குறள்களை ஒப்புவித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரை, மாவட்ட ஆட்சியர் சமீரன்  பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்.

கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த லிங்கமூர்த்தி –  பாலமகேஸ்வரி தம்பதியின் 15 வயது மகள் சிவதர்ஷினி. இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 190 விநாடிகளில் (3 நிமிடம் 10 விநாடிகள்) திருக்குறளில் 5 அதிகாரங்களில் 50 திருக்குறள்களை ஓப்புவித்து இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸ்  சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து சிவதர்ஷிணி கூறுகையில்: சின்னவயதில்  இருந்தே தமிழில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. பள்ளியில் நடைபெறும் பல்வேறு  நிகழ்வுகளில் பேச்சு, எழுத்து போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். சாதனை செய்ய வேண்டும் என்பதற்காகவே 50 திருக்குறள்களை வேகமாக ஒப்பிவிக்க பயிற்சி எடுத்தாக கூறுகிறார்.

50 திருக்குறள்களை 2.30 நிமிடத்தில் சொல்லி முடிக்க முடியும், ஆனால் தமிழுக்கு தெளிவும் உச்சரிப்பும் முக்கியம் என்பதால் 3 நிமிடம் 10 விநாடிகளில் ஒப்பிவித்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளேன். மேலும் 1330 குறள்களையும் ஒரு மணி நேரத்தில் சொல்லி சாதிக்க  முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார். தமிழக முதல்வரிடம் இந்த விருதினை காட்டி வாழ்த்து பெற வேண்டும் என்பது தான் தனது ஆசை எனவும் சிவதர்ஷிணி தெரிவித்தார்.

இவரின் பெற்றோர் பேசுகையில்: சிவதர்ஷிணி சிறு வயது முதலே தமிழில் ஆர்வமாக உடையவர். அதனால் அவளுக்கு தமிழில் தொடர்ந்து பயிற்சி அளிப்பதாகவும், ஒரு வார பயிற்சியிலேயே இந்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்று விட்டதாவும் தெரிவித்தனர்.

பயிற்சியின் போது முதலில் நேரம் அதிகமாக எடுத்து கொண்ட நிலையில் தற்போது குறைவான நேரத்தில் சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினர்.

 

SOURCE: NEWS 18 TAMILNADU