முன்னாள் அமைச்சரின் சகோதரர் காவல் ஆணையரிடம் மனு..!

தொழிலதிபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இதனால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் அன்பரசன் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

கோவைப்புதூரைச் சேர்ந்தவர் அன்பரசன். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரரான இவர் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அன்பரன் கூறியிருப்பது:

எனக்குத் தெரிந்த திருவேங்கடம் என்ற நபர் தனது தொழில் நொடிந்து விட்டதாகவும், மனைவியின் நகை, சொத்துக்களை அடமானம் வைத்து நஷ்டம் அடைந்ததாகக் கூறி ரூ.5 லட்சம் கடன் கேட்டார். இதன்பேரில் சொந்த ஜாமீனில் நான் தெரிந்த நண்பரிடம் கடனாக கேட்டதன் அடிப்படையில் எனது நண்பர் ஒருவர் திருவேங்கடத்துக்கு ரூ.5 லட்சத்தைக் கொடுத்தார்.

இந்நிலையில் பத்திரிக்கை நிருபர் ஒருவர் என்னை அழைத்து திருவேங்கடம் கூறியதாக என்னைப் பற்றி செய்தி வெளியிடப் போவதாகக் குறுஞ்செய்தி அனுப்பினார். இதுகுறித்து திருவேங்கடத்திடம் கேட்டபோது ரூ.1.5 கோடி கொடுத்தால் தடுத்து நிறுத்துகிறேன் என்றார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். பின்னர் சில நாள்களில் செய்தி வெளியானது, உடனே திருவேங்கடம் என்னைத் தொடர்பு கொண்டு, நான் சொன்னபடி செய்தி வெளியாகிவிட்டது. அடுத்ததாக நீங்கள் என்னை மிரட்டுவதாகக் கூறி போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன். எனவே நான் கேட்ட பணத்தை உடனடியாக தர வேண்டும். கட்சியில் என் சகோதரர் மற்றும் என்னுடைய மதிப்பைக் கெடுத்து தன்னுடைய பலத்தை கட்சியில் அதிகரிக்க உள்ளதாகவும் மிரட்டினார்.

இவரால் என் உயிருக்கோ, எனது குடும்பத்தினரின் உயிருக்கோ ஆபத்து வரும் என அஞ்சுகிறேன். எனவே திருவேங்கடம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.