வரிவிதிப்பு சட்டங்களின் கீழ் தளர்வுகள்: கொடிசியா சார்பாக வேண்டுகோள்

கொரோனா பெருந்தொற்று மற்றும் அது தொடர்பாக ஏற்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிக கடுமையானது. நடப்பு மூலதனம் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிவிதிப்பு சட்டங்களின் கீழ் சில தளர்வுகள் அளிப்பது மிகவும் உதவியாக இருக்கும் என்றும், பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தந்து வரும் தொழில்களை தொடர்ந்து நடத்த இந்த தளர்வுகள் உதவும் என கொடிசியா கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கொடிசியா தலைவர் எம்.வி ரமேஷ் பாபு கலந்து கொண்டார்.

இது குறித்த பத்திரிக்கை செய்தியில், தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் மத்திய விற்பனை வரி சட்டம் மற்றும் தற்போதுள்ள ஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றில் கீழ்க்கண்ட சில தளர்வுகளை எதிர்நோக்குகிறோம் என கோவையில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது.

சரக்கு மற்றும் சேவைகள் வரியில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் செய்வோர்க்கு பதிவு மற்றும் வரி விதிப்பு என்று உயர்த்த வேண்டும். மின்சாரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். தொழிலக கட்டுமானம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உள்ளீட்டு வரி வரவு பயன் வழங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

மேலும், ஜிஎஸ்டி சட்டத்தில் குறிப்பிட்ட கால வரையறைக்குள், திரும்பத் தரும் தொகையை பெற வழிவகை இருப்பினும் நடைமுறையில் அது செயலில் சிரமமாக உள்ளது. 10 நாட்களுக்குள் 90% தொகையை திரும்ப அளிக்கவும், மீதியை சரிபார்த்த பிறகு வழங்கவும் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி துறையில் வழிவகை உள்ளது. இது மாநில வணிக வரித் துறையில் பின்பற்றப்படுவது இல்லை.

இந்த பெருந்தொற்று காலத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இவ்வாறு திரும்ப அளிக்கப்படும் தொகை தொழிற்சாலையின் பல தேவைகளை ஈடுசெய்ய உதவும்.

எனவே ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள், இந்த திரும்பக்கேட்பு விண்ணப்பங்களை ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள தொகையை விரைந்து அளிக்குமாறு அறிவுறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

·