விஸ்வரூபம் ஆரம்பம்?!

தமிழக அரசியல் வானில் ஒரு புதிய நட்சத்திரம் உருவாகி இருக்கிறது. இது ஏற்கெனவே சினிமா வானில் மின்னிய நட்சத்திரம்தான். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து தமிழ்த்திரையுலகில் தனது நடிப்பாலும், தனித்திறமையாலும் விஸ்வரூபம் எடுத்த நட்சத்திரம். அதுபோல அரசியலிலும் நடக்குமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.

இப்போதுதான் அந்நட்சத்திரம் நேரடி அரசியலில் காலடி எடுத்து வைத்திருப்பதால் உடனே கருத்து கூறுவதும், விமர்சனம் செய்வதும் பெரிய பலன் தராது; என்றாலும் பொது வாழ்க்கையில் உள்ளவர் என்ற முறையில் பலருக்கும் அவரிடம் பலவிதமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. கமல்ஹாசன் என்ற அரசியல் தலைவரின் செயல்பாடுகளின் தாக்கம் சமூகத்தில் எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வியும் ஒரு புறம் எழுந்துள்ளது. முதலில் அவருக்கும், மக்கள் நீதி மய்யத்துக்கும் வாழ்த்துகள்.

திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது என்பது தமிழ்நாட்டுக்கு வெகு ஆண்டுகளாக பழகிப்போன ஒன்று. திராவிட இயக்கக் கொள்கை கொண்ட கட்சிகளில் முதலமைச்சராக இருந்த பெரும்பாலானவர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா என்று பலரும் திரைப்படத்துறை தொடர்பு கொண்டவர்கள்தான். அதைப்போலவே தனிக்கட்சி தொடங்கிய நடிகர்களும் இங்குண்டு. சிவாஜி கணேசன் தொடங்கி விஜயகாந்த் வரை பலர் அதற்கு எடுத்துக்காட்டு. ஆனால் கமல்ஹாசன் இதற்கெல்லாம் விதிவிலக்கு. விஜயகாந்த ஒருவரைத் தவிர மற்றவர்கள்  எல்லாம் அரசியலுக்கு திடீரரென கட்சி தொடங்கி நுழையவில்லை. முன்பே சில, பல ஆண்டுகள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றிய அனுபவத்துடன் வந்துள்ளனர். ஆனால் கமல்ஹாசன் அப்படி அல்ல. அரசியல் தலைவர்கள் பலருடனும் நல்ல நெருக்கமும், தொடர்பும் கொண்டவர். புத்தக வாசிப்பு கொண்டவர். மக்களிடம் மற்ற எல்லோரையும்விட நல்ல அறிமுகம் கொண்டவர். ஆனால் எந்த கட்சியிலும் இணைந்து பணியாற்றியவர் இல்லை.

அதுபோக, அவர் இத்தனை ஆண்டுகளாக அரசியல் கட்சியும் தொடங்கவில்லை. பெரிய அளவில் சமூகம் குறித்த கருத்துக்கள், போராட்டங்கள் என்று எதுவும் அவரிடம் இதுநாள்வரை வெளிப்பட்டது இல்லை. சொல்லப்போனால்  ரஜினிகாந்த்கூட சில நேரங்களில் தனது கருத்தை சில அரசியல்வாதிளுக்கு எதிராக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் கமல் அப்படி அல்ல. இப்போதும்கூட ரஜினிகாந்த் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி அரசியலுக்கு வரப்போகின்றேன் என்று அறிவித்திருப்பதுதான், இவரை இவ்வளவு தூரம் முடுக்கி விட்டிருக்கிறதோ என்று ஒரு கருத்தும் இருக்கிறது. என்றாலும் ரஜினிகாந்தை இந்த அரசியல் கட்சி தொடங்கும் விஷயத்தில் கமல்ஹாசன் முந்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆமாம், கடந்த பிப்ரவரி 21 அன்று மதுரையில் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியிருக்கிறார்.

அன்றுவரை நடந்த நிகழ்வுகளை மட்டும் பார்த்தால் அவரது வருங்கால அரசியல் செயல்பாடுகள் குறித்து பல எண்ணங்கள் பலரின் மனதிலும் எழுகின்றன. முதலில் அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பு சென்று சந்தித்தவர்கள் பட்டியல் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், கலைஞர் மு.கருணாநிதி என்று பல வகையான கருத்தோட்டங்களும் கொள்கைகளும் கொண்டவர்கள் பட்டியல் நீளுகிறது. கூடவே நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜயகாந்த் என்றும் அந்தப் பட்டியல் தொடர்கிறது. இதன்மூலம் கமல்ஹாசன் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்றுதான் புரியவில்லை.

திரு. அப்துல் கலாம் இருந்தவரை அவரைப்பற்றி பேசாதவர், அவரின் செயல்பாடுகளில் குறைந்தபட்சம் நடிகர் விவேக் போன்றவர்களைப்போலக்கூட பங்கேற்காத கமல்ஹாசன்தான் கட்சி தொடங்கும்போது, அவரின் வீட்டில் இருந்து பயணத்தைத் தொடங்குகிறார். அது அவரது விருப்பம் என்றாலும் அதைத்தாண்டி இவருக்கு வேண்டும் என்றால் இப்படியும் பயன்படுத்திக்கொள்வார்போல இருக்கிறதே என்று ஒரு எண்ணமும் எழுகிறது.

பொதுவாக, அவரின் ட்விட்டர் பக்கம் மூலமாக பல செய்திகளை பூடகமாக சொல்வது அவரது பாணியாக இருந்து வருகிறது. ஆனால் இது எல்லோருக்கும் எந்த அளவு சென்றடையும் என்று அவர் யோசிப்பதாகத் தெரியவில்லை. சாதாரண தமிழ் மக்களுக்கு இவரது அறிவு ஜீவி சொல்லாடல்கள் எந்த அளவு புரியும் என்று தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவரது முதல் பொதுக்கூட்டத்தில் அவரது கட்சியின் அமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் என்றெல்லாம் அறிமுகப்படுத்திய அளவுக்கு, அவரது கட்சியின் கொள்கைகள், எதிர்காலத் திட்டம் என்பதைப்பற்றி அவர் தெளிவாகக் கூறவில்லையே என்ற ஆதங்கமும் எழுகிறது.

ஒரு சாதாரண அரசியல்வாதி தரும் தேர்தல் அறிக்கையைப்போல, சில, பல பஞ்ச் டயலாக்குகளைத்தாண்டி எதுவும் புரியவில்லை. டாஸ்மாக்கைப் பற்றி பேசியவர், இது ஏதோ போன மாதம் தொடங்கப்பட்டதுபோல பேசுகிறார். ஏன் இதைக்குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு கருத்துகூட சொல்லவில்லை என்றும் புரியவில்லை. ஒரு சாதாரண நண்பர்கள் குழு அல்லது ஒரு நிறுவனம் செய்யக்கூடிய கிராமத்தைத் தத்தெடுத்து முன்னேறச் செய்வதை, ஒரு பெரிய செயல்திட்டமாகக் கொள்ள முடியாது. குவார்ட்டரும் ஸ்கூட்டரும் தர மாட்டேன் என்பது நல்ல கொள்கை. ஆனால் அதைத்தாண்டி மக்களுக்கு செய்வதற்கு உருப்படியாக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் மக்களின் கேள்வி.

எல்லோருக்கும் மின்சாரம், ஊழலை ஓழிப்போம் போன்ற பொத்தாம் பொதுவாக வாய்ஸ் கொடுப்பதைவிட ‘இன்னதுதான் கொள்கை, நாங்கள் இவற்றை ஆதரிக்கிறோம், இவற்றை எதிர்க்கிறோம்’ என்ற கொஞ்சம் தெளிவாகக் கூறுவது மக்களுக்குப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அதைவிடுத்து, காவிரி தண்ணீர் கேட்டால், இரத்தத்தைக்கூட வாங்கித் தருவேன் என்பது கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. 125 ஆண்டுகால சிக்கல், பல அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், மாநில அரசுகள், மத்திய அரசு, அதிகாரிகள் தீர்க்க முடியாமல் திகைக்கும் நிலையில்; தண்ணீருக்கு பரிதவித்துக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் முன் பேச்சுக்காக எதையோ பேசுவது பொருத்தமாகப்படவில்லை.

தொடக்க விழாவைப் பொறுத்தவரை விழா இனிதே நிறைவுற்றது. அவ்வளவுதான். இனி என்ன செய்யப் போகிறார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் ‘மக்கள் நீதி மய்யம்’ தலைமுறைகளைத் தாண்டி செயல்படப் போவதாகக் கூறி இருக்கிறார். இதற்கு காலமும், மக்களும் பதில் சொல்வார்கள்.