“கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை!” 

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை என்று கூறியும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று (28.07.2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.,வும் அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி வேலுமணி தலைமையில் குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து எஸ். பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்ந்துவிட்டு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் தருவதாக கூறினார்கள் அதையும் தற்போது வரை தரவில்லை. அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் விகிதம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற உறுப்பினர்களை எங்களுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நாங்கள் கோவைக்கு கொடுத்திருக்கிறோம்.

அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணிகளை ரத்து செய்திருக்கிறார்கள். என்று கூறினார்.

மேலும் , இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உடன் டெல்லி சென்று தமிழக நலனுக்காக குரல் கொடுத்து வந்துள்ளோம். கொரோனா தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார் .

மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றாலும் அதனை நிறைவேற்ற அதிமுக., தொடர்ந்து உழைக்கும் என கூறினார்.