பாகுபலி வெப் தொடர்: சிவகாமியாக நடிப்பது யார் ?

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சரித்திர கதையம்சம் கொண்டு இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி. பிரபல நடிகர்கள் நடித்த இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாகுபலி வெப் தொடர் உருவாக இருக்கிறது. 9 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரை ரூ.200 கோடி பட்ஜட்டில் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த வெப் தொடர் பாகுபலி கதையில் வரும் ராஜமாதா சிவகாமி தேவியின் இளவயது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது. இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் நடிகை சமந்தா பாகுபலி வெப் தொடரில் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தமிழில் மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை வாமிகா கபியை சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.