ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ‘பயோபிக்’

ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘யாத்ரா’ இரண்டாம் பாகம் எடுக்க தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘யாத்ரா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அந்த சோகம் அம்மாநிலம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆந்திர முதல்வர்களில் என்டிஆருக்கு பிறகு மக்கள் செல்வாக்கு கொண்ட நபராக அறியப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. இதனால் ‘யாத்ரா’ படம் எடுக்கும்போதே ஆந்திராவில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தப் படத்தை ஒய்எஸ்ஆர் மகள் ஷாஷி தேவி ரெட்டி தயாரித்திருந்தார். இதில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி ரூ.28 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. மஹி வி ராகவ் இயக்கத்தில் தேர்தலுக்கு முன்பு வெளியான இத்திரைப்படம் ஒய்எஸ்ஆர் மகன் ஜெகன்மோகனுக்கு நன்றாகாவே கைகொடுத்தது.

இந்த நிலையில், ‘யாத்ரா’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டாம் பாகத்தில் ஒய்எஸ்ஆர் வாழ்க்கையை பற்றி எடுக்க போவதில்லையாம். ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘யாத்ரா’ இரண்டாம் பாகம் எடுக்க போவதற்காக தெரிவிக்கிறார்கள்.

முதல் பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் மம்முட்டி வாழ்ந்திருந்த நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில், ‘ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’ வெப் சீரிஸில் நடித்திருந்த ப்ரதிக் காந்தி நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் மஹி வி ராகவ் தற்போது ஒரு காமெடி படத்தை எடுத்து வருகிறார். அதை முடித்த பின்பே இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.