கோவையில் போலீசுக்கும் இனி வார விடுமுறை!

கோவையில் போலீசாருக்கு இனி வார விடுமுறை விடப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு அடுத்தபடியாக போலீசாரின் சேவையும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஊரடங்கை அமல்படுத்துவதில் அயராது பணியாற்றி வருகின்றனர்.

தினமும் இரவு , பகலாக விடுமுறை இல்லாமல் போலீசார் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் . இந்த பணிச்சுமையால் பலரும் உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், கோவையில் போலீசாருக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி , நான்கு நாள் பணி செய்யும் போலீசார் , ஒரு நாள் விடுப்பு அளித்து ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் கூறுகையில், “போலீசாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்கப்படுகிறது . மற்ற அரசு ஊழியர்களைப் போல் , போலீசாருக்கும் வார இறுதி நாட்களில் விடுமுறை எடுக்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.” என்றார்.