வளர்ச்சிப்பணிகள் குறித்து  மாநகராட்சி ஆணையாளார் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்தியம், வடக்கு மற்றும் கிழக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள், தூய்மைப்பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளார் ராஜ கோபால் சுன்கரா இன்று 25.06.2021 ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.54க்குட்பட்ட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா களப்பணியாளர்களிடம் தெரிவிக்கையில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவை கண்டறியும் பணிகளை மேற்கொள்ளும்போது பரிசோதனையின் விபரங்கள் குறித்து கோவிட்-19 கள ஆய்வுப் பதிவேடுகளில் பதிவிட வேண்டும். பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, காட்டூர் பகுதியில்  செல்லப்பகவுண்டர் வீதி சாலையோரங்களில் உள்ள குப்பை மேடுகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு தூய்மைப்பணியாளர்கள் மூலம் குப்பைகளை அப்புறப்படுத்தி, வாகனங்களில் ஏற்றிச்செல்லும் தூய்மைப் பணிகள் நடைபெற்றுவருவதை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்களிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிக சிறப்பாக செய்திட வேண்டும், நேரம் தவறாமல் வருகைபுரிந்திட வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், கிழக்கு மண்டலம் காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.77.50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுவரும் பணிகளை ஆய்வு செய்து, கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் சரியான அளவில் கட்டப்பட்டுள்ளதா என அளவு நாடா மூலம் ஆய்வு செய்த பின், அப்பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் தொடர்புடைய அலுவலார்களிடம் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.