இந்திய அளவில் லாரி ஓட்டுநர்களுக்காக “சாரதி” கோவிட்-19 உதவி எண் அறிமுகம்

கோவை அப்பல்லோ டயர்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் இணைந்து லாரி ஓட்டுநர்களுக்காக ‘சாரதி’ என்ற பெயரில் தமிழ் உட்பட 5 மொழிகளில் கொரோனா உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளன. லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும் உன்னத நோக்கத்துடன் இந்த உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உதவி எண் (ஹெல்ப்லைன்) வாயிலாக கோவிட்-19 தொற்று தொடர்பான ஆலோசனை, தடுப்பூசி தொடர்பான ஆலோசனைத் தகவல்கள் மற்றும் கோவிட் அல்லாத பிற நோய்களுக்கான ஆலோசனைகளும் இதில் வழங்கப்படும். இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் இந்த உதவி எண் சேவை இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் அஸ்ஸாமி ஆகிய 5 மொழிகளில் கிடைக்கிறது. டெலிராட் ஃபவுண்டேஷன் இந்த உதவி எண் சேவைக்கான தொழில்நுட்பக் கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த எண் வாயிலான சேவைகளையும் ஆலோசனைகளையும் பெற, லாரி ஓட்டுநர் சங்கத்தின் உறுப்பினர்கள் 70281 05333 என்ற எண்ணில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அழைக்கலாம்.

கோவிட் பரிசோதனையின் போது தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள லாரி ஓட்டுநர் சங்க உறுப்பினர்கள், இந்த உதவி எண்ணை அழைப்பதன் மூலம் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறலாம். நோய்த்தொற்றுக் காலத்தில் அவர்கள், ஊட்டச்சத்து பற்றிய வழிகாட்டுதலையும் பெறலாம். கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு, சாரதி முன்முயற்சியின் ஒரு பகுதியாக மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மருந்துகளின் பரிந்துரை வழங்கப்படும்.

தடுப்பூசி குறித்த வழிகாட்டுதல்களைப் பெற விரும்பும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த உதவி எண் மிகவும் பயனுள்ளதாக அமையும். தடுப்பூசி தொடர்பான அவர்களது சந்தேகங்களைத் தீர்ப்பது, தடுப்பூசிக்காக கோவின் மற்றும் ஆரோக்ய சேது இணையதளங்களில் பதிவு செய்ய உதவுவது, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தேதி மற்றும் நேரத்தைப் பெற்று திட்டமிடுவது, தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கும் செய்வது, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் தேவைப்படும் மருத்துவ உதவிகள் போன்றவை தொடர்பாக உதவி மற்றும் ஆலோசனைகள் தேவைப்பட்டால் அவற்றுக்கும் இந்த உதவி எண் மூலம் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.