வெப்பத்தால் சுறா மீன்களுக்கு தோல் நோய் பாதிப்பு?

மலேசியா கடல் பகுதியில் பவளப் பாறைகளுக்கு இடையே ரீஎப் வகை சுறா மீன்கள் கூட்டமாகக் காணப்படும். கடந்த ஏப்ரல் மாதம் போர்னியோ தீவுக்கு அருகே முத்துகுளிப்பவர்கள், ரீஎப் வகை சுறா மீன் ஒன்று மர்மமான தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு படம் எடுத்தனர். அந்த சுறாவின் தலையில் புண் போன்ற அடையாளங்கள் இருந்தன. அந்தப் படம் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து, முத்துகுளிப்பாளர் குழுக்களும் பாதுகாப்புக் குழுக்களும் அப்பகுதியில் உள்ள சுறாக்களைக் கண்காணிக்கத் தொடங்கினர். பல சுறாக்களின் உடலில் அதே போன்ற அடையாளங்கள் இருப்பதைக் கண்டறிந்து உள்ளனர்.

இதுகுறித்து கடல்துறை உயிரியல் நிபுணர்கள் கூறுகையில், ‘கடல் வெப்பம் அதிகரித்து இருப்பது, மீன்களுக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம். கடலில் ரசாயனங்கள் கலப்பதும் காரணமாக இருக்கலாம். இதுகுறித்து ஆய்வுகளை தொடங்கி உள்ளோம்’ என்றனர்.