கோவையில் இன்னும் கட்டுக்குள் வராத கொரோனா

கோவை மாவட்டத்தில் நோய்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராத சூழலில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் தொற்று பரவல் பாதிப்பு மே 28 ம் தேதி 4 ஆயிரத்தை கடந்து உச்சநிலையை அடைந்து, தொடர்ந்து தமிழகத்தில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது.

நேற்றைய தினம் பாதிப்பு 2645 என இருந்த நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் பலி அதிகரித்து, நேற்று மட்டும் 38 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இச்சூழலில் முழு ஊரடங்கில் தளர்வு அளித்து மளிகை, காய்கறி, இறைச்சி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என அனுமதி அளித்திருப்பது பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியேறி கடைகளை நோக்கி மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொற்று பரவல் கட்டுக்குள் வரும் வரை கடைகளை திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்து தள்ளிவைக்க வேண்டும் என கோவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.