தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் சார்பில் ரூ. 75 லட்சம் நிதி !

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக அரசு செய்துவரும் நோய் கட்டுப்பாடு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு உதவிடும் வண்ணம் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் 1 (செவ்வாய்க்கிழமை) அன்று முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழங்கினர்.

சங்கத்தின் உறுப்பினராக உள்ள பெரும் ஹோட்டல்கள் உரிமையாளர்கள் முதல் சாதாரண தேநீர் கடை வைத்துள்ள எளியவர்கள் வரை அனைவரின் பங்கீடும் இந்த நிதியில் உள்ளது.

இந்த காசோலையினை அச்சங்கத்தின் தலைவர் டார்லிங் எம்.வெங்கட சுப்பு முதல்வரிடம் வழங்கும்போது தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் சீனிவாசன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் ஜெகன் எஸ். தாமோதரசாமி, ஜி.ரெங்கநாதன் குரு ஹோட்டல், வழக்கறிஞர் பிரவின் ரத்தினம், எல்.என் மாரியப்பன், சிவகாசி ஆகியோர் உடனிருந்தனர்.

கொரோனாவுடனான போர் முடிந்ததும் மீண்டும் நிர்வாகிகளை நேரிலோ அல்லது இணையதள வீடியோ அழைப்பு மூலம் அழைத்து உணவகங்களின் தேவைகள், அரசிடம் எதிர்பார்க்கும் உதவிகள், வேண்டுகோள்கள் குறித்து ஆலோசனை நடத்துவதாக முதல்வர் தெரிவித்ததாக அச்சங்கத்தின் தலைவர் டார்லிங் எம்.வெங்கட சுப்பு தெரிவித்தார்.