கொரோனா நோயாளிகளுக்கான உதவி தொடர்பு மையம்

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதெற்கென கோவை சி.எஸ்.ஐ.ஆலயம் மற்றும் ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பாக உதவி தொடர்பு மையம் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில்,நோய் தொற்று பாதிப்பில் மாநிலத்திலேயே கோவை மாவட்டம் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்துள்ள நிலையில், இது போன்று நோய் தொற்று பாதித்தவர்களுக்கான உதவி தொடர்பு மையம் கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ ஆரம்ப பள்ளியில் துவங்கப்பட்டது.

ஜீவசாந்தி அறக்கட்டளை மற்றும் சி.எஸ்.ஐ ஆலயம் சார்பாக துவங்கப்பட்ட மையத்தை சகல ஆன்மாக்கள் ஆலயத்தின் ஆயர் சார்லஸ் சாம்ராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க.நிர்வாகிகள் காலனி வினோத் ஆனந்த், தளபதி மோசஸ், பூர்ண சந்திரன், மற்றும் பள்ளி தாளாளர் அருள் பிரபு, அறக்கட்டளை தலைவர் சலீம் மற்றும் பிரவீன்,ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தொடர்பு மையத்தை தொடர்பு கொள்ளும் நோயாளிகளுக்கு தேவையான உணவு வழங்க உள்ளதாகவும் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள், அவசர தேவைக்கென பத்து ஆக்சிஜன் செறிவூட்டிகளும் உள்ளதாக சி.எஸ்.ஐ.ஆலயத்தின் ஆயர் சார்லஸ் சாம்ராஜ் தெரிவித்துள்ளார்.