50,000 ஆண்டு வரலாறு கொண்ட மருதாணி

ஒப்பனை அலங்கார பொருட்களில் இயற்கையான பொருட்களில் முதன்மை இடம் வகிப்பது மருதாணி. மருதாணி செடி இலைகளை அரைத்து இரவு உறங்கும் முன் கையில் போட்டுக்கொண்டு இரவு முழுவது விழித்திருந்து இது சிவந்திருக்குமா இல்லையா என்ற எண்ணத்துடன் காலையில் எழுந்து சிவந்திருக்கிறதா, எந்த அளவிற்கு சிவந்திருக்கிறது என்று பார்த்து மகிழ்ச்சியுற்ற காலம் சில ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது.

இருப்பினும் மருதாணியின் மீதான மோகம் குறையவில்லை என்றே சொல்லலாம். தென்னிந்திய கிராமங்களில் இது இன்றும் பழக்கத்தில் உள்ளது. நகர்புறங்களில் மெஹந்தி என்ற ரசாயன கலவையாக புழக்கத்தில் இருக்கிறது.

மருதாணிப் பசையில்  உடலில் சித்திரங்கள் வரையும் கலை மிக மிகப் பழமையானது. மருதாணி எப்போதிலிருந்து  அழகுப் பொருளாகப் பயன்பாட்டில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லமுடியாது என்றாலும் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அழகு சாதனப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் மருதாணி இருந்திருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

மருதாணி பற்றிய  தொல்லியல்  சான்றுகள் எகிப்திலிருந்து கிடைத்திருக்கின்றன. மம்மிகளாக்கப்படும் முன்பு இறந்த உடல்களின் கை மற்றும் கால்விரல் நகங்களில் மருதாணிப் பசை பூசும் வழக்கம் எகிப்தில் இருந்திருக்கிறது.  கிளியோபாட்ரா மற்றும்  இரண்டாம் ராம்செஸ், ஆகியோரின் மம்மி ஆக்கப்பட்ட  உடல்களில்  மருதாணி சாயத்தில் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பண்டைய இந்தியாவின் உடற்கலையின் ஒரு முக்கிய வடிவமாக மருதாணி இலை சாற்றின் சித்திரங்கள் இருந்து வருகின்றன. அக்காலப் பெண்கள் தங்கள் மார்பில் மருதாணி சித்திரங்களை வரைந்து கொள்வது ’தொய்யல்’ எனப்பட்டது மிக பழமையான இந்திய கடவுள்களின் சித்திரங்களிலும் மருதாணி வடிவமிட்ட கைவிரல்களை பார்க்க முடியும்.

இந்தியா உள்ளிட்ட  பல நாடுகளிலும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் கைகளையும் கால்களையும்  மருதாணி விழுதால் அழகுபடுத்திக் கொள்வதும், மணப்பெண்ணின் உடல் முழுக்க மருதாணி சித்திரங்கள் வரைந்து விடுவதும் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. மொராக்கோவில் கர்ப்பிணிகள் மருதாணி இட்டுக் கொள்வதால் தங்களை தீய சக்திகள் நெருங்காது என்று நம்புகிறார்கள் இன்னும் பல சமுதாயங்களில் மருதாணி இட்டுக் கொள்வது மங்கலம் என்றும் நம்பப்படுகிறது.  இன்னும் சில கலாச்சாரங்களில் மணமகன் பெயரை மணமகளின் உடலில் மறைவாக மருதாணியால் எழுதிவிட்டு மணமகன் அதை அவர்கள் சந்திக்கும் முதல் இரவில் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் வழக்கம் இருக்கிறது.

நான்கிலிலிருந்து ஆறு மணிநேரம் சருமத்தில் வைத்திருந்த பின்னர் நீரில் கழுவுகையில்  ஆக்ஸிஜனேற்றம் (oxidation) ஏற்பட்டு சாயத்தின் அடர்த்தி குறையும் என்பதால் உலர்ந்த மருதாணியைத் தாவர எண்ணெயைக்கொண்டு அகற்றலாம். காய்ந்த மருதாணி விழுதை   வெதுவெதுப்பான உப்பு நீரிலோ, சர்க்கரை கலக்கபட்ட தேங்காய் எண்ணையாலோ அல்லது உப்பு சேர்க்க்கப்பட்ட ஆலிவ் எண்ணெயாலோ அகற்றுகையில் சருமம் உலர்வது தடுக்கபட்டுச் சிவப்பு நிறமும் வெகுநாட்களுக்கு நீடித்திருக்கும்.

கோடையில் வாரம் ஒருமுறை மருதாணியை அரைத்து தலையில் பூசி குளிக்கையில் உடல் வெப்பம் பெருமளவில் குறையும் கைகால்களில் மருதாணி இட்டுக்கொள்வது உடலை குளிர்விக்கும். மருதாணி மலர்களை ஒரு துணியில் கட்டி தலையணைக்குள் வைத்துக்கொண்டால் நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும். மருதாணி இட்டுக் கொள்வதால் மன அழுத்தம் தலைவலி காய்ச்சல் சரும வியாதிகள் ஆகியவை நீங்கும்.

அஜந்தா குகை ஓவியங்களில் மருதாணிச் சாற்றின் வண்ணங்களை இன்றும் காணலாம்.   மருதாணி சாற்றில் வலம்புரி ஸ்வஸ்திகம் வரைந்து கொள்வது வட இந்திய வியாபாரிகளிடம் பலகாலமாக இருந்து வரும் வழக்கமாகும்.

பல விவசாய நிலங்களில் உயிர்வேலியாகவும் தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் மருதாணி பயிரிடப்படுகின்றது.  பூச்சியோ நோயோ தாக்குவதில்லை என்பதால் எந்த செலவுமின்றி  இதை வளர்க்கலாம். அழகு சாதனப்பொருட்கள், கேசத் தைலம், இயற்கைச் சாயம் மருந்து பொருட்கள் எனப் பல தொழில்களில் மருதாணி மூலப்பொருளாகப் பயன்படுவதால், மருதாணி வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும்.