வீட்டில் இருந்தே வேலை செய்பவரா நீங்கள்?

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தினர்.

தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவ தொடங்கியதையடுத்து வீட்டில் இருந்து வேலை பார்ப்பது மீண்டும் அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்வது பாதுகாப்பாக இந்த சூழலில் இருக்கும். மேலும் உங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவது, உங்கள் அன்றாட பயணத்தில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவது மற்றும் வசதியாக பணிபுரிவது என இதில் கூடுதல் நன்மை இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் அது சவாலாகவும் உள்ளது. ஏனெனில் நம்மில் சிலர் வேலையில் மூழ்கிவிடுவதால், உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, இதனால் ஆரோக்கியம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகிறது.

தற்போது ஊரடங்கு என்பதால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகள் திறந்திருக்கும். அதனால், அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாது, ஆரோக்கியமான உணவு பொருட்களையும் சேமித்து வைப்பது முக்கியம். சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவசியம். வேலை உள்ளது என சாப்பாட்டை தவிர்ப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் அதிகப்படியான நீர் அருந்தவது அவசியம்.

பெரும்பாலோர் வீட்டில் எங்காவது ஒரு விருப்பமான இடத்தில் அமர்ந்து வேலை செய்வார்கள். அது உங்கள் படுக்கையாக அறையாக கூட இருக்கலாம். ஆனால் இந்த சூழல் உறக்கத்தை உண்டாகுவதாக இருக்கலாம். நீங்கள் வேலை  செய்வதற்கு என ஒரு தனிப்பட்ட இடத்தை தயார் செய்வது உங்கள் வேலையை மேலும் எளிதாக்கும். அதாவது வீட்டு அமைப்பிலிருந்து உங்கள் அலுவலக பாணிக்கு இடத்தை மாற்றலாம்.

வீட்டிலிருந்து வேலை செய்வதால் விடுமுறை கேட்பதில் தயக்கம் இருக்கும். ஆனால், ஓய்வு இல்லாமல் வேலை செய்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக வேலை செய்யும் நாட்களில் கூட குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு ஒரு முறை ஓய்வு அவசியம்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது திட்டமிடுவது மிக முக்கியமானது. அதிக கவனம் செலுத்தி வேலை செய்தவர்கள் கூட வீட்டில் இருந்து வேலை செய்யும் போது சூழலை கொஞ்சம் சவாலாகக் காணலாம். வீட்டில் இருக்கும் போது அதிக கவனச்சிதறல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு கொள்வது உதவியாக இருக்கும். ஒரு பணியை முடிக்கும்போது அவற்றை சரிபார்க்க மறக்காதீர்கள், ஏனென்றால் அதுதான் சிறப்பாக பணியாற்ற உதவும்.

Source: News 18 Tamilnadu