கொரோனா காரணமாக தண்ணீர் வரி 2 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தலாம்

-மாநகராட்சி ஆணையாளர்

கொரோனா பெருந்தொற்று காரணமாக இனி வரும் காலங்களில் இரு மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர்மானி கணக்கு எடுக்கப்பட்டு அதற்கான கட்டணத்தை மாநகராட்சி வரிவசூல் மையத்தில் செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் எல்லை விரிவாக்கத்திற்கு முன்பிருந்த மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளில், குடிநீர் விநியோக முறையில் தற்போது ஒவ்வொரு குடிநீர் இணைப்பிலும் இரு மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் பயன்பாட்டு அளவு குடிநீர் மானியில் கணக்கெடுக்கப்பட்டு, பயனாளிகளிடம் உள்ள குடிநீர் மானி அட்டையில் பயன்படுத்தப்பட்ட அளவும், செலுத்த வேண்டிய தொகையும் பதியப்படுகிறது. குடிநீர் இணைப்பு பயனாளிகள் தங்கள் குடிநீர்மானி அட்டையினை மாநகராட்சியின் வரிவசூலிப்பு மையத்தில் காண்பித்து குடிநீர் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

தற்போதைய நோய் தொற்று சூழ்நிலையில் குடிநீர்மானி அளவெடுப்பவர், பயனாளிகள் மற்றும் வரிவசூல் மைய பணியாளர்கள் ஆகியோருடன் நேரடி தொடர்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு மாறுதல் செய்யப்படுகிறது.

இனி வரும் காலங்களில் இரு மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர்மானி கணக்கு எடுக்கப்பட்டபின் பயனாளியின் கைபேசிக்கு, குடிநீர் பயன்படுத்தப்பட்ட அளவு, செலுத்த வேண்டிய தொகை மற்றும் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விபரங்கள் குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும். பயனாளிகள் தங்கள் கைபேசிக்கு வந்த குறுந்தகவலை மாநகராட்சி வரிவசூல் மையத்தில் காண்பித்து தொகையை செலுத்தலாம்.

பொதுமக்கள் அனைவரும் தாங்கள் மேற்கண்ட வசதியினை பயன்படுத்தி செலுத்த வேண்டிய கட்டணத்தை குறித்த நாட்களுக்குள் செலுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.