எஸ்.என்.எம்.வி கல்லூரியில் மாணவர்களுக்கு வாக்களிக்கும் பயிற்சி

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டமும், மதுக்கரை வட்ட வழங்கல் துறை மற்றும் வருவாய் துறையும் இணைந்து (10.03.2021) புதன்கிழமையன்று கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு – 122 கிணத்துக்கடவு சட்டசபையின் மலுமிச்சம்பட்டி தொகுதியின் கீழ் எஸ்.என்.எம்.வி கல்லூரியில் வாக்களிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாக்காளர்களை விழிப்புணர்வுடன், பாதுகாப்பான, தகவலறிந்த, அதிகாரமிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மதுக்கரை திட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்குமார், ஒத்தக்கால் மண்டபம் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் கோகிலா, மலுமிச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுஜரிதா, மதுக்கரை தனிவருவாய் ஆய்வாளர் சசிக்குமார், ஒத்தக்கால் மண்டபம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீராம், அரிசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

மாணவர்கள் சுதந்திரமான, நியாயமான, மதம், இனம், சாதி கடந்து வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றனர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமையேற்று மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்று வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை கூறினார். இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு வாக்களிக்கும் பயிற்சி எடுத்தனர்.