கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்கள் கவுரவிப்பு !

1971ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போர் வெற்றியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, கோவை பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது.

1971ம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரில், பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதோடு, வங்கதேசம் என்ற தனிநாடு உருவாகவும் வழிவகுத்தது. இரண்டாம் உலக போருக்குப்பின், ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் இந்தப் போரில் சரணடைந்தனர். இப்போரின் 50வது பொன்விழா வெற்றி ஆண்டு டிசம்பர் 16ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொன்விழா வெற்றி ஆண்டை முன்னிட்டு, பல்வேறு நினைவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரி உள் அரங்கில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி இன்று (10.3.2021) நடைபெற்றது. இதில் விமானம், கப்பல், தரைப்படை என முப்படை வீரர்களும் பங்கேற்றனர். வெற்றி ஜோதி கொண்டு வரப்பட்டு மேடையில் ஏற்றி வைக்கப்பட்டது. இதையடுத்து அப்போரில் பங்கேற்ற சுமார் 150 இராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.