வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ஈ -பாஸ் கட்டாயம்!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வர ஈ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் குறைந்து காணப்படும் நிலையில் மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ஈ -பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவையை பொறுத்தவரை கேரள மாநிலத்தின் அருகே அமைந்துள்ளதால் இங்கு போலீசார் எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக கோபாலபுரம், வாளையாறு, வேலந்தாவலம், உள்ளிட்ட 13 மாநில எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோவை மத்திய ரயில் நிலையன், போத்தனூர் ரயில் நிலையங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து வருபவர்கள் ஈ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஈ-பாஸ் இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தும் போலீசார், எல்லையிலேயே நின்று ஈ-பாஸ்.,க்கு விண்ணப்பித்து, பாஸ் கிடைத்த பின்னர் கோவைக்குள் வர அனுமதிக்கின்றனர். எனினும், ஈ-பாஸ் வழங்குவதில் கடந்த முறையை போல் இல்லாமல், விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவில் பாஸ் வழங்கப்படும் என்றும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.