தமிழக கிராமிய கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக ‘விர்ச்சுவல்’ தமிழ் மாரத்தான்

கோவை, தமிழ் கலைகள், கலாச்சாரம், பண்பாடிற்கு புத்துயிர் கொடுக்கவும், தமிழக கிராமங்களில் உள்ள மருத்துவம் மற்றும் கல்விக் கூடங்களை மேம்படுத்தவும் நிதி திரட்ட ‘விர்ச்சுவல்’ தமிழ் மாரத்தான் 2021 இம்மாதம் 10-24 தேதிகளில் நடைபெறவுள்ளது. தமிழகம், பிற மாநிலங்கள், தமிழர்கள் அதிகம் வாழும் 30திற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மொத்தம் ஒரு லட்சம் தமிழர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதன் மூலம் உலகிலேயே அதிகமானோர் பங்குபெறும் விர்ச்சுவல் மாரத்தான் என்ற சாதனையை தமிழ் மாரத்தான் 2021 படைக்கவுள்ளது. கோவையில் இருந்து மட்டும் 5000 பேர் இந்த மாரத்தானில்  பங்கெடுக்கவுள்ளனர்.

இம்மாரத்தானில் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே மொபைல் ஆப் உதவியுடன் அனைவரும் பங்கு பெறலாம். கலந்து கொள்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 100. ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் 3km, 5km, 10km, மற்றும் 21 km ஆகிய போட்டி தூரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வசூலிக்கப்படும் மொத்த கட்டணமும் 50 தமிழக கிராமங்களின் தேவைகளுக்காகவும், தமிழக கிராமிய கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தத்ப்படவுள்ளது. பங்குபெறும் அனைவருக்கும் ஒரு இ-பேட்ஜ் மற்றும்  உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கெடுத்ததற்கான மின் சான்றிதழும் வழங்கப்படும். ரூபாய் 300 மற்றும் ரூபாய் 500 கட்டணம் செலுத்தி முழுமையாக ஓட்ட தூரத்தை கடந்தவர்களுக்கு முறையே நிறைவு மெடல் மற்றும் டி-சர்ட் ஆகியவை வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 15,000 ரொக்கத் தொகையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 10,000 மற்றும் ரூபாய் 5,000 ரொக்கத் தொகையும் வழங்கப்படும்.

நிகழ்ச்சி குறித்து தமிழ் மாரத்தானை நடத்தும் அமைப்பின் தலைவர் ஹேமந்த் ஆர் பேசுகையில், “தமிழ் கலைகள் மற்றும் கலாச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவது ஒவ்வொரு தலைமுறையின் கடமை. அது போல தமிழக கிராமங்கள் தன்னிறைவு பெற நம்மால் இயன்ற பங்களிப்புகளை வழங்க வேண்டும். இந்த இரண்டு நோக்கங்களுக்காக தமிழ் மாரத்தான் 2021 நடைபெறுகிறது. வாழ்வாதாரத்தை இழந்து வரும் தமிழ் கிராமிய கலைஞர்களுக்கு உதவும் விதமாக ஒரு இணைய மேடையை அமைத்து அதில் தொடர்ந்து மயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், கும்மி, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, கோலாட்டம், ஒயிலாட்டம் தெருக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். அது போல, குறைந்தபட்சம்  50 தமிழக கிராமங்களின் மருத்துவமனை மற்றும் கல்விக்கூடங்களின் மேம்பாட்டிற்கு உதவவும் திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

முன்பதிவு செய்ய கடைசி நாள் ஜனவரி 10. இந்நிகழ்ச்சியில் பதிவு செய்ய https://www.tamilmarathon.org என்ற இணைய தளத்தையோ அல்லது 89399 32224 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.