கே.பி.ஆர் கலை கல்லூரியில் அதிவேக கற்கும் திறன் பயிற்சி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மற்றும் திறன்மிகு பட்டாம்பூச்சிகள் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனமும் இணைந்து ட்ரினிடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மிக அதிவேக கற்கும் திறன் பயிற்சி நிகழ்வை இணைய வழியில் தொகுத்து வழங்கியது.

இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக  மனநல நிபுணர் விஜயகுமார் பள்ளி மாணவர்களுக்கானப் பயிற்சி நுட்பங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். அதிவேக கற்றல் திறன் வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். நாம் ஒரு கருத்தை சிந்திக்காததன் விளைவே ஞாபக மறதி என்றும் அதனை எவ்வாறு மாற்றிக்கொண்டுப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பது  பற்றியும் எடுத்துரைத்தார்.

கவனச் சிதறலை எப்படியெல்லாம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்பதை விளக்கினார். மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களைக் களைந்து தனித்திறமைகளை வெளிக்கொணர்வதற்கு உண்டான வழிமுறைகளைக் கூறி ஊக்குவித்தார். பின்னர் மாணவர்களுக்குத் தேர்வு தொடர்பான இடர்பாடுகள் குறித்தும் விளக்கம் தந்து  நிறைவு செய்தார்.

கே.பி.ஆர் கலை கல்லூரியின் முதல்வர் பாலுசாமி அவர்களும் ட்ரினிடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் தனலெட்சுமி இந்நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் 200க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.