‘‘எனக்கு வாய்ப்புக் கொடுத்தவர் இயக்குனர் சசி’’

ஒரு திரைப்படத்தில் ஒளிப்பதிவு என்பது முக்கியப்  பங்கு வகிக்கிறது. சிறப்பான ஒளிப்பதிவால் தமிழ் சினிமாவில் தனித்துவம் பெற்ற பலர் இருக்கின்றனர். அவ்வாறு தன் திறமையாலும், கடின உழைப்பாலும் தனக்கென்று ஒரு இடம்பிடித்த ஒளிப்பதிவாளர், இயக்குனர், தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையாவை ‘மதுரை வீரன்’ படத்தின் இறுதிக்கட்ட பணியில் சந்தித்த போது, அவர்  நம்மிடம்  பகிர்ந்துகொண்டவை…

சினிமா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதை ஒரு பொழுதுபோக்கு ஊடகமாகப் பார்க்காமல், சமூகத்திற்குத்  தேவையான பல நல்ல தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஊடகமாகவே கருதுகிறேன். எனக்கு சினிமாவின்மீது எப்போதும்  தனிப்பட்ட பாசம் உண்டு. அதனால் நான் பி.எஸ்சி. (விஸ்.காம்) முடித்த பிறகு ஒளிப்பதிவாளர் ராஜரத்தினத்திடம் உதவி ஒளிப்பதிவாளராகச் சேர்ந்து பணியாற்றிக்  கொண்டிருந்தேன். அப்போது இயக்குனர் மீரா கதிரவனின் நட்பு கிடைத்தது.

அவர் இயக்கிய குறும்படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவு செய்தேன். அதற்குப் பிறகு அவர் இயக்கத் தயாராக இருந்த ‘அவள் பெயர் தமிழரசி’ படத்துக்கு என்னை ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்தார். அந்த சமயம் படப்பிடிப்புத்  தள்ளிப்போன நேரத்தில், நான் ஒளிப்பதிவு செய்த குறும்படத்தை இயக்குனர் சசி பார்த்து என்னை அழைத்தார்.

பின்னர்  அவர் இயக்கிய ‘பூ’ படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்து விட்டார். அந்தப் படத்தின் மூலம்தான்  நான் தமிழ் சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக பயணம் செய்யத் தொடங்கினேன்.

படம் வெளியானதும், ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது. அதற்குப்பிறகு, ‘அவள் பெயர் தமிழரசி’ படமும் நான் ஒளிப்பதிவு செய்தேன். அதனைத்  தொடர்ந்து, கண்டேன் காதலை, சேட்டை, சகுனி, ஒரு ஊருல ரெண்டு ராஜா போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்து முடித்தேன். இந்நிலையில், படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நல்லதை நினைத்து விட்டால் உடனே செய்துவிட வேண்டும் என்று மனதில் வைத்துக் கொண்டு ராஜா மந்திரி  போன்ற படங்களைத்  தயாரித்தேன். தயரிப்பாளரான பிறகு, இயக்குநராகும் ஒரு புதிய எண்ணம் தோன்றியது.

கதை எழுதும் தருணத்திலேயே ஜல்லிக்கட்டை மையப்படுத்தி, மண் சார்ந்த கதையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஜல்லிக்கட்டு பிரச்னை தமிழகத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே எனது கதை, திரைக்கதை பணிகள் தொடங்கிவிட்டன. அந்தப்  பணிகள்  முடிந்தபிறகு கேப்டன் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் என் கதையை சொன்னேன். பிறகு அவர், கதை ரொம்ப நல்லா இருக்கு. நாளைக்கே கேப்டனிடம் கதை சொல்லுங்கண்ணு சொன்னாங்க. கேப்டனை சந்தித்து கதை சொல்லும்போது, அவருடைய மகன்கள் இரண்டுபேரும்கூட இருந்து என் கதையைக்  கேட்டுவிட்டு உடனே ஓகே சொல்லிட்டாங்க.

இப்போது அந்தக் கதைதான் ‘மதுரைவீரன்’ படமாகத் தயாராகிக் கொண்டு இருக்கிறது. உறுதியாக இப்படம் மக்களுக்குப்  பிடிக்கும். ஜல்லிக்கட்டுக்கு பின்னாடி இருக்கும் நமக்கு தெரியாத மண் சார்ந்த விஷயங்களை படத்தில் பார்க்கலாம். கதை எழுதி முடித்த உடனே இந்தக் கதைக்கு கேப்டன் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சமுத்திரக்கனிதான் சரியாக இருக்கும் என்று என் மனதில் தோன்றியது. சண்முகபாண்டியன் கதைக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு நடித்துள்ளார். சமுத்திரக்கனி பற்றி நான் சொல்வதைவிட தமிழக மக்களுக்கே அவரின் நடிப்பைப்  பற்றி தெரியும். அண்ணன் சமுத்திரக்கனி எனக்கு ரொம்ப நாட்களாக பழக்கம். அவர் இயக்கிய நாடோடிகள் படத்தைத்  தெலுங்கு மொழியில் ரவி தேஜா, ப்ரியாமணியை வைத்து இயக்கினார். அந்த படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவு செய்தேன். அதற்குப் பிறகு மதுரை வீரன் படத்தின் கதையை நான் அவரிடம் சொல்லும்போது என்னை ஊக்கப்படுத்தி மேலும் உற்சாகப்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் பல பிரச்னைகள் இருந்தாலும், மக்களை ஈர்க்கும் படத்தை எடுத்தால் திரையரங்கத்துக்கு வந்து படம் பார்ப்பார்கள். திரையரங்கத்தின் டிக்கெட் விலை அதிகம் என்று நாம் கூறிக் கொண்டு வருகிறோம். மற்ற மாநிலத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் டிக்கெட் விலை அதிகம். அவர்களை ஒப்பிட்டுப்  பார்க்கும்பொழுது நம் தமிழ்நாட்டில் டிக்கெட் விலை குறைவு. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு விக்ரம் வேதா போன்ற படங்கள் வெற்றி பெற்று உள்ளன. கடந்த வாரம் ரிலீஸான அவள், அறம், தீரன் போன்ற படங்கள் மக்களின் பாராட்டைப் பெற்று இன்னும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றியை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பது எனது ஆழமான கருத்து. 2018 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கை பயணத்தில் உற்சாகம், வெற்றியைத் தேடி வரும்.