மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு

கோவை இருகூர் பேரூராட்சி ராவத்தூர் சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணிகள் நடைபெற்று வருவதை  மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் போக்குவரத்து வசதியினை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாவட்டம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நகரப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிகராக மேம்பட்ட வளர்ச்சி பணிகளை கோவை மாவட்டத்தின் அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக தார்சாலைகள், சிறுபாலங்கள், போன்றவற்றின் தரம் உயர்த்தப்பட்டு முன்மாதிரி மாவட்டமாக கோவை திகழ்ந்து வருகின்றது.

அதன்படி, இருகூர் பேரூராட்சி ராவத்தூர் சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.3.87கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து,  மாவட்ட ஆட்சித்தலைவர் இம்மேம்பாலப்பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்டு மேம்பாலப் பணிகளை தரமானதாக அமைத்திடவும், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இப்பாலம் அமைவதால், இரூகூர், ராவத்தூர், பள்ளபாளையம், சூலூர், கண்ணம்பாளையம், முத்துக்கவுண்டன் புதூர், திருச்சி சாலை,  மற்றும் அவினாசி சாலை ஆகிய முக்கிய பகுதிகளிலிருந்து உள்ளே வாகனங்கள் வருவதற்கும், வெளியில் செல்வதற்கான பயணம் நேரம் குறைவதுடன் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.