காந்திபுரம் மேம்பாலம் ரூ.25 கோடி செலவில் மறுவடிமைப்பு செய்யப்பட உள்ளது!

கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலம் மறுவடிமைப்பு செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்த சூழலில், அதனை எவ்வாறு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் மாற்ற உள்ளதாக விளக்கியுள்ளார்.

காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. பார்க் கேட் பகுதியில் இருந்து, ஆம்னி பேருந்து நிலையம் வரை செல்லும் முதல் அடுக்கு மேம்பாலத்தாலும், 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தாலும் பெரும்பாலான மக்களுக்கு பயன் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பாலத்தை மறு வடிவமைப்பு செய்ய பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையல், விரைவில் பாலம் மறு வடிவமைப்பு செய்யப்படும் என்று பாலம் திறக்கப்பட்ட போதே முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த சூழலில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று பாலத்தின் திட்டத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”காந்திபுரம் உயர்மட்ட பாலத்தில் இருந்து 100 அடி சாலைக்கும், பாரதியார் சாலையிலும் இறங்கும் வகையில் இரண்டு இறங்கு தளம் அமைக்கும் பணி ரூ.25 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் இந்த பணிகள் துவங்கும்.” என்றார்.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயமாக மக்கள் பலர் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.