மேம்பாலப்பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் பொறியாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்டம், ராமநாதபுரம் – சுங்கம், கவுண்டம்பாளையம், ஜி.என்.மில் சந்திப்பு ஆகிய பகுதிகளில் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருவதை இன்று (04.11.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் போக்குவரத்து வசதியினை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாவட்டம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம், உக்கடம் உயர்மட்டப்பாலம், மற்றும் புறவழிச்சாலைகள் அமைத்தல்,  மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கோவை மாவட்டத்தில் சாலைகள், மேம்பாலம், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம் திருச்சி சாலையில் ராமநாதபுரம் முதல் சுங்கம் வரையில் ரூ.253 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.66கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, ஜி.என் மில் சந்திப்பில் ரூ.41.88 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ராமநாதபுரம் முதல் சுங்கம் மேம்பாலப்பணிகள், கவுண்டம்பாளையம் சந்திப்பு, ஜி.என் மில் சந்திப்பு மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மேம்பாலப் பணிகளை தரமானதாக அமைத்திடவும், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.