பழங்குடியின மாணவர்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை மாவட்டத்தில் தாட்கோ துறையின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ  மாணவியர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள கட்டணமில்லாமல் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தாட்கோ  மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு குறுகிய கால (3 மாதம் முதல் 6 மாதம் வரை) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

இவ்வாண்டு கோவை மாவட்டத்தில் கள தொழில்நுட்ப வல்லூர் பிற வீட்டு உபகரணங்கள் (Field Technical Other Home Appliances) பயிற்சி பெற  எம்.கே.கே. தொழில்துறை பள்ளி, மரப்பேட்டை, 3/784, உடுமலைபேட்டை சாலை, பொள்ளாச்சி, கோவை – 642001 (கைப்பேசி எண்-99422 32244), மற்றும் ஒப்பனை கலைஞர் (Beautician), முடி ஒப்பனையாளர் (Hair Stylist) பயிற்சி பெற ஜோஸ் & ஜெனிஸ் மல்டி டெக் பிரைவேட் லிமிடெட், எண்2/72/119/2வது மாடி, கோவை இ.என்.டி மருத்துவமனை வளாகம் சத்தி மெயின் ரோடு கணபதி, கோவை – 641006 (கைப்பேசி எண் -70109 76709, 99004 24565) – ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடத்திட பயிற்சி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

தங்களது தகுதித்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ/மாணவியர்கள் பயிற்சி நிறுவனங்களை தொடர்பு கொண்டு தாங்கள் விரும்பும் பயிற்சியினை மேற்கொள்ளலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக வழங்கப்படும் இத்திறன் மேம்பாட்டு பயிற்சி முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும், மாணவ/மாணவியர்கள் பயிற்சி பெற சென்று வருவதற்கான பயணப்படி, போக்குவரத்து செலவு மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகளும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்று பெற்ற பயிற்சியாளர்கள் மாவட்ட மேலாளாரிடம் தாங்கள் பெற்ற பயிற்சிக்கு ஏதுவாக தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, பயன்பெறலாம். இலவச மானியத்துடன் கூடிய வங்கிகடன் வழங்கிட ஆவண செய்யப்படும். இதன் மூலம் ஆதிதிராவிட / பழங்குடியினர் வாழ்வாதாரம் உயரும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.