ஒன்றரை மணி நேரம் ஆணிப்படுக்கையில் நின்று பறையிசை

கோவையை அடுத்த பூலுவபட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் ஆணிப்படுக்கையில் நின்று பறையிசை நடத்தி சாதனை படைத்துள்ளார்.

கோவையில் கல்லூரி மாணவர்களை வைத்து கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கிராமிய புதல்வன் கலை குழுவை கலையரசன் என்பவர் நடத்தி வருகிறார். தமிழக அரசின் கலை பிரிவில் தூதராகவும் உள்ளார்.

இந்நிலையில் இவரது குழுவில் பறையிசை பயின்று வருபவர் கோவையை அடுத்த பூலவபட்டி எனும்  சிறிய கிராமத்தை சேர்ந்த அருள்மொழி. சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் பேரூர் தமிழ்கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார். இந்நிலையில் தனது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் சுமார் ஒரு வருடமாக ஆணி படுக்கையில் பறையிசைக்க கிராமிய புதல்வன் கலை குழுவில் பயிற்சி பெற்று, ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஆணிப்படுக்கையில் நின்று பறையிசைத்து உலக சாதனை புரிந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்த சாதனையை செய்ததாகவும், எனது தாயார் தின கூலி வேலைக்கு சென்று வருவதாகவும், எங்களது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்வதே பெரும் சவாலாக உள்ள சூழ்நிலையில் தாம் இந்த சாதனையை செய்துள்ளதாக கண்ணீர் மல்க அவர் கூறினார். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பெண்களால் சாதிக்க முடியும் என்ற இந்த இளம் கல்லூரி மாணவியின் சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.