மேற்கு மண்டல காவல்துறையில் பிறந்தநாள், திருமண நாளுக்கு கட்டாய விடுமுறை – ஐஜி தகவல்

கோவை: மேற்கு மண்டல காவல்துறைக்கு உட்பட்ட 8 மாவட்டங்களில் காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அந்த நாளில் மாவட்ட கண்காணிப்பாளர்களிடம் இருந்து வாழ்த்து மடல்கள் அனுப்பப்படுவதாகவும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

போலீசாருக்கு இருக்கும் கடுமையான பணிச்சூழல் காரணமாக அவர்களால் குடும்பத்துடன் போதிய அளவு நேரத்தை செலவிட முடியாமல் போகிறது. இந்த சூழலில், மேற்கு மண்டல காவல்துறையில் காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த இரண்டு நாட்களிலும் சம்மந்தப்பட்ட போலீசாருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் கையொப்பமிட்ட வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா கூறியதாவது, காவல்துறையினர் 24மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றக்கூடியவர்கள். பணிச்சூழல் காரணமாக அவர்களால் குடும்பத்துடன் போதிய அளவு நேரத்தை செலவிட முடியவில்லை. இதன் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு நான் கோவை  மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளுக்கு கட்டாய விடுப்பு கொடுத்தேன் தொடர்ந்து. வாழ்த்து மடல்களையும் பரிசளித்தேன். மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றது முதல் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களிலும் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் தினத்தில் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர் கையொப்பமிட்ட வாழ்த்து மடல் போலீசாருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு நாட்களிலும், எவ்வித பணி இருந்தாலும் போலீசாருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது போலீசாரின் குடும்பத்தையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. இவ்வாறு பெரியய்யா கூறினார்.

மேற்கு மண்டல காவல்துறையில் மட்டும் கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை 38 ஆயிரம் முறை போலீசாருக்கு வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.