தமிழக ஊரகப் புத்தாக்கத் திட்ட புதிய அலுவலகம் திறப்பு

கிண்டி, சிட்கோ வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் புதிய அலுவலகத்தை இன்று (11.9.2020) சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டமானது, 918 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கியின் கடனுதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 120 வட்டாரங்களைக் சேர்ந்த 3,994 கிராம ஊராட்சிகளில் ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுக்கவும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அம்மா அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிராமப்புற மக்களை வறுமை மற்றும் கடனிலிருந்து பாதுகாக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக முதல்வரால் கோவிட்-19 சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டமானது தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் ரூ.300 கோடி மதிப்பில் மொத்தம் 1,39,574 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 28.05.2020 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவிட்-19 சிறப்பு நிதியுதவி தொகுப்பின் மூலம் 254.94 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு மொத்தம் 1,63,694 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தனிநபர் தொழில் முனைவோருக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் கடன் உதவியாக ரூ.159.6 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு 49,652 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் ரூ.49.88 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு 33,603 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய திறன்பெற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் துவங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் ரூ.20.47 கோடி வழங்கப்பட்டு 2,052 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். செயல்பாட்டில் உள்ள 1270 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் மூலதன மானியம் ரூ.19.05 கோடி வழங்கப்பட்டு 56,003 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். செயல்பாட்டில் உள்ள 201 தொழில் குழுக்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் மூலதன மானியம் ரூ.3.01 கோடி வழங்கப்பட்டு 2,928 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.செயல்பாட்டில் உள்ள 29 உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் மூலதன மானியம் ரூ.2.09 கோடி வழங்கப்பட்டு 19,039 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.

திட்டப் பணியாளர்கள் பயன் பெறும் வகையில் ரூ.83.00 இலட்சம் செலவில் 417 பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வந்த தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அலுவலகம் தற்போது கிண்டியில் அமைந்துள்ள சிட்கோ வளாகத்தின் 5வது தளத்தில் புதுப்பொலிவுடன் செயல்பட உள்ளது என சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட தலைமைச் செயல் அலுவலர் கார்த்திகா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் சந்திரகலா, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குநர்கள், அலுவலர்கள் மற்றும் திட்ட பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.