செப்டம்பர் 10 – உலக தற்கொலை தடுப்பு தினம் : தற்கொலை என்பது தடுக்க முடிந்த இறப்பு

ஸ்ரீநிதி நித்தியானந்த், மனநல மருத்துவர், கே.எம்.சி.எச் மருத்துவமனை.

ஆண்டுதோறும் செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய நவீன பொருளாதார உலகில், எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வு இல்லை என்று சொல்லை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாத தலைமுறையினரை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகில் ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒரு தற்கொலை நிகழ்கிறது.

தற்கொலை முயற்சியால் இறக்கும் ஒவ்வொருவருக்கும், 25 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது அல்லது தீவிர தற்கொலை எண்ணத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. அது அவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தையும், பெரிய அளவில் சமூகத்தையும் பாதிக்கும்.

தற்கொலை முடிவுக்கான காரணங்கள் :

மனச்சோர்வு, மனச்சிதைவு நோய், குடி மற்றும் போதை பழக்கம் என மனநோய்கள் ஒருபுறமிருக்க இதுபோன்ற எல்லா முடிவுகளுக்கும் மனநல நோய்கள் மட்டுமே காரணம் அல்ல.

குடும்ப சிக்கல், தேர்வில் தோல்வி, காதல் ஏமாற்றம், தொழிலில் கஷ்டம் போன்ற சூழல்கள் ஏற்படுத்தும் மனநலக் குறைபாட்டாலும் இந்த எண்ணங்களும் முயற்சிகளும் வருகின்றன.

இதற்கான அறிகுறிகளாக, ஒருவர் எதிலும் நாட்டம் இல்லாமல் இருப்பது, தனிமைப்படுத்திக் கொள்ளுதல், தூக்கம் மற்றும் பசியின்மை, குடிப்பழக்கம் அதிகரித்தல், தகுதியற்றவன் என்ற எண்ணம், யாராலும், எதுவும் எனக்கு உதவ முடியாது என்ற எண்ணம் மற்றும் எதிர்காலத்தின்மீது நம்பிக்கை இல்லாத மனநிலை ஆகியவை உள்ளது.

ஒருவருக்கு இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் பொழுது தனிமைப்படுத்திக் கொள்ளாமல் நெருங்கிய உறவுகளைஅணுகவேண்டும்.

இந்த உலக தற்கொலை தடுப்பு தினத்தின் தலைப்பாக “எல்லோரும் ஒன்றிணைந்து தற்கொலையை தடுப்பது” உள்ளது. இந்த தினத்தில் நம்மை நெருங்கியவர்களுக்கு இத்தகைய எண்ணம் அல்லது இத்தகைய நிலை வந்தால் என்ன செய்வது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த மனநிலை மற்றும் எண்ணங்களை பற்றி யாராவது உங்களிடம் கூறினால் அதனை சிறிதுபடுத்தாமல் காது கொடுத்து கேட்க வேண்டும்.

நமக்கு அனுபவம் உள்ள விஷயம் என்றால் அதற்கு ஆலோசனை வழங்கலாம். அவர்களை தனியாக விடாமல் ஆதரவு தரவேண்டும்.

நீங்கள் அருகில் இல்லை என்றால் அவருடன் இருப்பவர்களுக்கு இத்தகைய எண்ணம் குறித்து தெரிவிக்க வேண்டும்

தற்கொலை என்பது தடுக்க முடிந்த இறப்பு, அதற்கு மனநல மருத்துவரை அணுகி தீர்வு பெற தயங்கக்கூடாது.