அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சென்னை : தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது தமிழக முதல்வரின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரித்தால், சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகளுக்கு சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துவது தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்தல், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளில் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், பேருந்து தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் போன்ற திட்டப்பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும்.

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தியாகராய நகர், பாண்டி பஜார், தியாகராய சாலையில் 1522 சமீ பரப்பளவில் ரூ 40.79 கோடி மதிப்பில் சுமார் 500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 200 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் முற்றிலும் தானியங்கி முறையில் அமைக்கப்பட்டு வரும் 2 கீழ்தளம், தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் பணிகளை விரைந்து முடிக்கவும், தமிழக முதல்வரின் ஒப்புதலோடு வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.