ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலை ஸ்மார்ட் சிட்டி பணி நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர்  குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கௌலிபிரவுன் ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்பணிகளில் சாலை அமைக்கும் பணி, பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி, மின்சார புதைவிடம், கேபிள்கள், 24/7 குடிநீர் குழாய் பதிக்கும் பணி, தொலைத்தொடர்பு கேபிள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், பாதசாரிகள் நடைபாதை, அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணி, ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கும் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர்  குமாரவேல் பாண்டியன் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து திவான்பகதூர் சாலையில் ரூ. 41.33 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக 373 கார்கள் நிறுத்துவதற்காக கட்டப்பட்டுவரும் மல்டிலெவல் கார்பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இவ்வாய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, செயற்பொறியாளர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரவணக்குமார், வைதீஸ்வரன்(மின்வாரியம்), உதவி செயற்பொறியாளர் சுகந்தி, பால்ராஜ்(மின்வாரியம்) உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சத்தியமூர்த்தி, குடிநீர் பிரிவு இளம்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.