ஆதரவற்றோர் ஆசிரமம் உருவாக காரணம் அன்பின் பற்றாக்குறையே !

பகவத்கீதை, குரான், பைபிள் போன்ற சர்வ வேத நூல்களும் அன்பு என்ற ஒன்றைத்தான் வாழ்வின் அர்த்தம் என்று நமக்கு உணர்த்துகிறது. அவற்றை இழந்து அல்லது அதை பெற முடியாத ஒரு மனிதன் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு ஆதரவற்றவனாக வழிநடத்தபடுகிறான். அன்பை இழந்த ஆதாரவற்றவர்களுக்கு உணவோ, உடையோ, இருப்பிடமோ கிடைப்பது கடினம். ஒரு மனிதனிடம் ஒரு குடும்பத்தின் இடையே, ஒரு சமூகத்தின் இடையே எப்பொழுது அன்பு குறைகிறதோ அப்பொழுதுதான் ஆதரவற்றவர்கள் உருவாகிறார்கள். இது —அனைவருக்கும் பொருந்தும்.

அப்படி அன்பை இழந்த ஒருவருக்கு மற்றும் ஒரு குடும்பத்திலிருந்தோ, ஒரு சமூகத்தாலோ, ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஒரு குடும்பமாக, ஒரு நண்பனாக ஆதரவுக்கரம் நீட்டும் செயலை ஆத்மார்த்தமாக, அர்ப்பணிப்புடன் செய்து வருகிறது. கோவையில் உள்ள    “பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம்”. இந்த சேவாஸ்ரமம் உணவு, உடை, உறைவிடம், படிப்பு, மருந்துகள் இல்லாதவர்களுக்கு ஒரு குடும்ப அங்கத்தினாராக இருந்து உதவி வருகிறது. இவ்வமைவு  20 ஆண்டுகளுக்கு முன்னர் 10 ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது இங்கே 365 பேருக்கு மேல் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். கோவையில் மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், உடுமலை, அவினாசி, கோபி, பெரம்பலூர், திருச்சி ஆகிய இடங்களிலும் சேவை தொடர்கிறது. இனி தமிழகம் முழுவதும் தொடங்கப்படப்போகிறது.

இந்த மனித குல சேவையை மகத்தான முறையில் செயல்படுத்தி வரும் இவ்வமைப்பின் நிறுவனர் குருஜி ஷிவாத்மா நம்மிடையே பகிர்ந்துகொண்ட விரிவான தகவல்கள் இதோ உங்களுக்காக…

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் யாருக்கானது?

கோவை கருமத்தம்பட்டிக்கும் அன்னூருக்கும் இடையே நல்லகவுண்டபாளையத்தில் உள்ள இந்த ஆசிரமத்தில் ஆண், பெண் குழந்தைகளுக்கென்று தனித்தனியாகவும், கைவிடப்பட்ட ஆண், பெண்கள் காப்பகங்கள் மற்றும் முதியோர்களுக்கென்று தனித்தனியாகவும், காப்பகங்கள் உள்ளன. அதேபோல் உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனிக்காப்பகம் உள்ளது.

குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்

சேவாஸ்ரமத்தின் தனிச்சிறப்பான கோசாலையில் 50 க்கும் மேற்பட்ட பசுக்கள், கன்றுகள் கொண்ட கோமாதா ஆலயம் உள்ளது. ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு உணவு தயாரிக்கவும், உணவருந்தவும் தனித்தனியாக இடங்கள் அமைக்கப்பட்டு அதனை அவர்களே தங்களது சொந்த வீடுகளைப்போல பராமரிகின்றனர். அத்துடன் 10 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ள இந்த ஆசிரமத்தை கவனிக்க தனி அலுவலகமும் உள்ளேயே அமைக்கப்பட்டு அவர்கள் மூலமே நிர்வாகிக்கப்படுகிறது. இங்கு உள்ளவர்களுக்கென தனியே இயங்கும் மருத்துவமனையில் சுற்றுப்பகுதி மக்களுக்கும் முற்றிலும் இலவசமாக மருத்துவ சேவை மேற்கொள்ளப்படுகிறது. 24 மணிநேர இலவச ஆம்புலன்ஸ் வசதியும் உண்டு.

இங்கிருக்கும் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டமாக உழைப்போடுதான் உணவையும் உரிமையையும் பெற வேண்டும் என்பது இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உயர்வு, தாழ்வு இல்லாத சமத்துவம் வழங்கப்படுகிறது.

வெளியுலகில் கிடைக்காத ஆழமான வாழ்வுக்காகவும், உள்ளுணர்வின் திருப்திக்கும் உருவாக்கப்பட்டுள்ள சர்வமத ஆலயம், நவவிருட்ச ஆலயம், நட்சத்திர விருட்ச ஆலயம், ஆத்ம ஆலயம், அமைதி தெய்வம், பிரம்மாலயம், தவாலயம், பாவ சாப தோஷ விமோட்ச பீடம், மௌனாலயம் ஆகிய ஆலயங்கள் மூலம் மன ஒருநிலைப்பாட்டுக்கு உகந்த வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றது.

சர்வமத ஆலயம், மதங்களை கடந்த மனிதநேயத்தை உருவாக்குகிறது. அதற்கு பின்னால் உள்ள நவவிருட்ச ஆலயத்தில் ஒன்பது தெய்வீக குணங்கள் கொண்ட மரங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் இருக்கின்றன. நட்சத்திர விருட்ச ஆலயத்தில் 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தின் மையப்பகுதியில் உள்ள அமைதி தெய்வம் மனிதர்களுக்கு அமைதியே அடிப்படை அவசியம் என்பதை ஆழமாகவும், ஆணித்தரமாகவும் உணர்த்துகிறது.

அடுத்துள்ள ஆத்ம ஆலயம், ஆத்மாவை அறியும் முயற்சிக்கென 11 அடி ஆழமும் உயரமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து, நமது உயிர்த்தன்மையோடு தொடர்பு வைக்ககூடிய ஆலயமாக அமைந்துள்ள பிரம்மாலயத்தின் வெளித்தோற்றம், இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம் ஆகிய மதங்கள் தொடர்பான 4 கோபுரங்கள் ஒரே அமைப்பாக அமைக்கப்பட்டு அதன் உள்பகுதியில் மனிதனின் 7 சக்கரங்களை சக்தியூட்டுவதற்கான 7 மையங்கள் உள்ளன.

தொடர்ந்துள்ள தவாலயத்தில், மன அழுத்தம் அல்லது கடந்த கால கவலைகளில் இருந்து வெளியேற தவத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ஏதுவான ஒரு இடமாக இது உள்ளது. அடுத்தது மௌனாலயம். இங்கு சுயம்பாக புற்று ஒன்று வளர்ந்து வருகிறது. இதில் ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு சித்தர்கள், ஞானிகள் முக உருவம் இயல்பாக பதிவாகி உள்ளது.

இந்த ஆலயங்கள் பணம், பொருள், சொத்து என்ற நிலையற்ற தேவைகளைவிட, அனைவருக்கும் தேவையான அமைதியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

அன்றாட செயல்பாடுகள்

காலை 3 மணிக்கு விழித்து 5 மணி வரை தியானம் செய்யலாம். 5 மணிக்கு சமையல் வேலை தொடங்கிவிடும், 6 மணிக்கு சுக்கு தேநீர்

(கொரோனா காலத்தில் மட்டுமல்லாமல் எப்பொழுதுமே) வழங்கபடுகிறது. காலை உணவாக இட்லி, பொங்கல் மற்றும் 20 சதவிகிதம் பழ வகை, கீரை, பயறு போன்ற ஏதாவது ஒரு சத்துணவு வழங்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு கேளிக்கை நேரமும், விளையாட பூங்காவும் அதற்கென தனி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கென நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இது போக 3000 மரங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றது, இதில் பெரும்பாலானவை பழ வகை மரங்கள். இங்குள்ள பெண்கள் சமையலுக்கு காய் கறி நறுக்குவது போன்ற பணிகளையும் செய்கின்றனர்.

பெண்களுக்கென்றே தனிச்சிறப்பு ஏற்பாடுகள்

இங்கு பெண்களுக்கென தனி பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பும் முன் உரிமையும், வசதிகளும் வழங்கப்படுகின்றது. 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான “பிற்காப்பு இல்லம்” மூலம் வாழ்வின் அடுத்தகட்ட நிலைக்கு குறிப்பாக பள்ளி முடிந்து கல்லூரி படிப்பிற்கும், பணிக்கும், திருமண வாழ்க்கையை அமைப்பதற்கும் சிறப்பாக ஏற்பாடுகள் அமைத்து கொடுக்கபடுகிறது. கடந்த ஆண்டு கோவை ஃவைஸ் மென் கிளப் சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த ஆண்டும் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது அனைத்தையும் தாண்டி எம்மதமும் சம்மதம் என்ற சமத்துவ கொள்கையுடன் தீபாவளி, பொங்கல், கிறித்துமஸ், ரம்ஜான் போன்ற மத விழாக்களும், சுதந்திரம், குடியரசு போன்ற தேசிய விழாக்களும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினங்களில் புத்தாடை, இனிப்புகள் போன்றவை தன்னார்வத்துடன் நன்கொடையாளர்களால் வழங்கபடுகிறது.

மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்

தங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் ஒதுக்கப்பட்டவர்களை மற்றும் கைவிடப்பட்டவர்களை இருக்கத்திலிருந்து மீட்க அவர்கள் விரும்பிய துறையில் ஈடுபட சுதந்திரமும், பிறருடன் எளிமையாக பழகும் வாய்ப்பும் வழங்குகிறோம். இவர்களை அன்பால் அரவணைத்து, அன்பின் மூலமாக அவர்களது நிலையை சரி செய்யும் சிறப்பு அன்பு மருத்துவத்தை செய்கிறோம்.

உதவிகள் கிடைக்கும் வழிகள்?

இந்த ஆஸ்ரமத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசின் மூலம் சிறு சிறு உதவிகள் அவ்வபோது கிடைக்கிறது. அதுபோக, 80 சதவிகித நலன்கள் தன்னார்வ— நன்கொடையாளர்களால் தான் நடைபெற்று வருகிறது. அவர்கள் மூலமே இங்குள்ள 365 பேருக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகின்றது.

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம்” பெயர்க்காரணம்?

இந்த பூமியைத் தாண்டிய ஒன்றுதான் பிரபஞ்சம். எங்களது சேவையும் அதுபோல் இந்த இருப்பிடத்தைத் தாண்டி உலகளவிலான வளத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதை மையபடுத்துவதே இதன் அர்த்தம். அத்துடன், பல கோள்களைக் கொண்டதாக பிரபஞ்சம் இருப்பதால் இந்த பிரபஞ்சத்திற்கு அதிமுக்கியமான ஒன்றான அமைதியை தரும் சேவையை செய்யகூடியதாக ஆசிரமம் இருக்க வேண்டும் என்பதற்காக இப்பெயர் வைக்கப்பட்டது.

இதற்கான ஆரம்பப்புள்ளி?

எனது 7 வயதில், ஒரு பார்வையற்றவருக்கு உதவி செய்தபோது, நீ படித்து பெரிய ஆளாகி என்னை போன்ற ஏழை எளியவர்களுக்கு நீ உதவ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அன்றிலிருந்து இயலாதவர்களுக்கு உதவும் சிந்தனை என்னை தொடர்ந்துகொண்டே இருந்தது. அங்கிருந்துதான், மற்றவர்களுக்கு உதவும் விதமாக நாம் வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதுவே தற்பொழுது வாழ்வாக மாறியுள்ளது.

ஆசிரமத்தின் முக்கிய சேவைகள்?

பசி என்ற பிணியை போக்குவது தான் இதன் முழுமுதல் சேவை. மேலும் சமூகம், இயற்கை, ஆன்மீகம், கல்வி, மருத்துவம் என ஒரு தனி மனிதனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திருக்கும் என்னவெல்லாம் தேவையோ அந்த அடிப்படை தேவைகள் அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் முக்கிய சேவை.

உங்களைப் பற்றி சிறு தகவல்கள்?

கோவை, சாய்பாபா காலனியில் பிறந்து, திருச்சி டால்மியா புரத்தில் சிறிது காலம் கடந்து, உடுமலைபேட்டையில் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை படித்தேன். பள்ளி படிப்பின்பொழுது, வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தை கொண்டுதான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது அந்த கஷ்டமான காலத்தை கடந்து வந்ததால் தான் தற்பொழுது ஒரு ஏழை குழந்தையை பார்த்தால் அதன் படிப்பிற்கு ஏதாவது உதவ முடியுமா என்ற எண்ணம் தோன்றுகிறது. அதன் அடிப்படையில் தான் இந்த ஆசிரமம் இன்று வரை இயங்குகிறது.

“சர்வமதமும் சம்மதம்” என்ற எண்ணத்திற்கு, நான் கல்வி கற்ற காலத்தில் என்னுடன் பயின்ற பல்வேறு மதங்களை சார்ந்த நண்பர்களே காரணம். அவர்களின் வேத நூல்கள் அனைத்தும் சொல்வது அன்பு என்ற ஒன்றைத் தான்… ஆத்ம நமஸ்காரம் என்றார்.

நமது வாழ்வின் பயணத்தில் பிறருக்காக வாழும் இது போன்ற மனிதர்களை சந்திப்பது மிக அபூர்வம். சுயநலம் இன்றி பிற ஆன்ம நலனுடன் வாழ தன் வாழ்வை அர்ப்பணித்த இந்த பேரான்மாவும், அவரது பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமமும் தங்களது பணியை இடையிறாது தொடர நாம் இறைவனை தொழுவோம், நம்மால் இயன்ற உதவிகளை நாமும் செய்வோம்! நமக்கு கீழே உள்ளவர்களையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நாம் நன்றாக வைத்திருந்தால், நமக்கு மேலே உள்ள இறைவன் நம்மை நன்றாக வைத்திருப்பார் என்பது இங்கு நன்கு புரிந்தது. நல்லதொரு மனிதரைக் கண்ட திருப்தியிலும் நல்ல எண்ண அலைகளை கொண்டிருக்கும் ஆசிரமத்தை கண்ட மகிழ்ச்சியிலும், அவரிடம் இருந்து விடைபெற்றோம்.