கோவையில் நவீன ரோபோக்கள் மூலம் பாதாள அகற்றும் பணி தீவிரம்

கோவை மாநகராட்சியில் நவீன ரோபோக்கள் மூலம் பாதாள சாக்கடைகளை  சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருவதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிகளில் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யவும், கழிவு நீரை அகற்றவும் மனிதர்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நவீன ரோபோக்கள் வாங்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் சமூக நலன் தொகையில் இருந்து ரூ.2.12 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கு கழிவுகளை அகற்ற நவீன ரோபோக்கள் வாங்கப்பட்டது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை மாநகராட்சிக்கு வழங்கிய  இந்த ரோபோக்களை இயக்க ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கழிவுகளை சுத்தம் செய்ய இறங்கும் பணியாளர்கள் விஷ வாயு தாக்கி  உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் விரைவில் பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது ரோபோக்கள் மூலம் கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கோவை உப்புளிபாளையம் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த பாதாள சாக்கடையில் இருந்து கழிவுகளை ரோபோக்கள் மூலம் சுத்தம் செய்தனர். வழக்கத்தை விட மிக விரைவாக கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதோடு, மற்ற இடங்களிலும் கொட்டாமலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் செய்து வருவதால் பொதுமக்கள் வரவேற்பு  தெரிவித்து வருகின்றனர்.