வாழ்க்கைக் கலைஞர் நாரண.துரைக்கண்ணன் பிறந்த தினம்

தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிக்கையாளராகவும், இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் தனிமுத்திரை பதித்தவருமான நாரண.துரைக்கண்ணன் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.

இவர் பல்வேறு பெயர்களில் பல கதைகளை எழுதி வந்தாலும் ‘ஜீவா” என்ற இவரது புனைப்பெயர்தான் பிரபலமாக அறியப்பட்டது. இவரது சரஸ்வதி பூஜை என்ற முதல் கட்டுரை 1924 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழில் வெளியானது.

இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்கள், கதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய உயிரோவியம், நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?, தாசி ரமணி முதலியவை பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் ஆகும்.

இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தனது பத்திரிக்கையில் தலையங்கங்கள், கட்டுரைகளை எழுதினார். இதனைக் கண்டித்து ஆங்கிலேய அரசு அவருக்கு எச்சரிக்கை விடுத்தாலும், எங்கள் கொள்கையை விடமாட்டோம், இது எங்களது தேசியக் கடமை எனத் துணிச்சலுடன் அறிவித்தார்.

மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்க வேண்டுமென்பதற்காகப் பாடுபட்டவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். இவர் நற்கலை நம்பி, இலக்கியச் செம்மல் என்னும் பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். வாழ்க்கைக் கலைஞர் என்று மு.வ. அவர்களால் போற்றப்பட்ட இவர் 1996 ஆம் ஆண்டு மறைந்தார்.