கோவையில் 8 போலீசார் உட்பட 397 பேருக்கு கொரோனா !

கோவையில் 8 காவலர்கள் உள்பட 397 பேருக்கு இன்று (20.8.2020) கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள், பி.ஆர்.எஸ். காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

அதன்படி இன்று (20.8.2020) மாநகர காவல் பிரிவை சேர்ந்த 55 வயது ஆண் காவலர், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 42, 54, 46 வயது பெண் காவலர்கள், 19, 24, 37 வயது பெண் காவலர்கள் மற்றும் பி.ஆர்.எஸ். காவலர் பயிற்சிப் பள்ளியை சேர்ந்த 25 வயது ஆண் காவலர் ஆகிய 8 காவலர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த 19 வயது  செவிலியர் பயிற்சி மாணவி, 27 வயது பெண், 34 வயது ஆண் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மாவட்ட நகர திட்டக்குழும அலுவலகத்தை சேர்ந்த 29 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கணபதியை சேர்ந்த தலா 11 பேர், ராமநாதபுரத்தை சேர்ந்த 16 பேர், செல்வபுரத்தை சேர்ந்த 6 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 32 பேர்,  மேட்டுப்பாளையம், கே.கே.புதூரை சேர்ந்த 8 பேர், வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 397 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 181 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்தது குறிப்பிடத்தக்கது.