‘கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தி ஆசிரியரே இல்லை!’ – மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத்

“கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இந்தி படிக்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்வி இடம் பெறவில்லை என்று மாநகராட்சி ஆணையாளர் விளக்கமளித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க கொடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்களில் 18 பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 14-வது பிரிவில், “இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா அல்லது கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக, மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்று கொள்ள முடியாது என்று அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே,“தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும். புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால், கோவை மாநகராட்சிப் பள்ளி விண்ணப்பப் படிவங்களில் இந்தி மொழி குறித்து கேள்வி இடம்பெற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத், “அந்த விண்ணப்பம் மாநகராட்சி சார்பில் வழங்கபடவில்லை. மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பள்ளி சார்பில் இந்தி குறித்தான விண்ணப்பம் கொடுத்திருந்தால், பள்ளி ஆசிரியரிடம் கேளுங்கள். தவறான புகார் தெரிவித்தவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்படி பள்ளி சார்பில் இந்த விண்ணப்பம் கொடுக்கப்பட்டிருந்தால், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சி பள்ளியில் இந்தி வழிக்கல்வி முறையே இல்லை. இங்கு இந்தி ஆசிரியர்களே இல்லை. இது தவறான தகவல்’’ என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.